தமிழில்
மோஹனன்
Subhashini.org
  
கண்மணியே கண்ணுறங்கு
வகை: சிறுகதைகள்
10 reads • Oct 2026


Write a Review





கண்மணியே கண்ணுறங்கு
மோஹனன்

10 reads • Oct 2026 • 965 words • 30 rows

   தமிழில்
மூலமுதல் பதிவு: தமிழ்
  பௌர்ணமி நிலவு அந்த ஊரின் வயல்வெளிகளில் பாலை ஊற்றியது போல் ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது. காரிருளைக் கிழித்துக்கொண்டு வீசிய குளிர்ந்த வாடைக்காற்று பனைமரங்களின் ஓலைகளில் பட்டு ஒருவித அமானுஷ்யமான சத்தத்தை எழுப்பிக்கொண்டிருந்தது.
1/30
ராஜா வெளிநாட்டில் இருந்து தனது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிக்கொண்டிருந்தான். அவன் வருவது யாருக்கும் தெரியாது. அவனது வருகையை ஒரு இன்ப அதிர்ச்சியாகக் கொடுக்க வேண்டும் என்பதே அவனது எண்ணம். குறிப்பாக அவனது மாமன் மகள் கவிதாவிற்கு. இரயிலை விட்டு இறங்கி ஊரின் எல்லையை அடைந்தபோது இரவு பத்து மணியைத் தாண்டியிருந்தது. ஊருக்குள் செல்வதற்குப் பலகாத தூரம் நடக்க வேண்டும். ஏறிச் செல்வதற்கு ஒரு மாட்டுவண்டி கூடக் கண்ணில் தென்படவில்லை. கையில் ஒரு லாந்தர் விளக்குக் கூட இல்லை. இருந்தும் கவிதாவின் மேல் இருந்த அளவற்ற பிரியத்தின் காரணமாக அவளை விரைவில் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் ஓட்டமும் நடையுமாக ஊருக்குள் புகுந்தான்.
2/30
இருபக்கமும் இருந்த பசுமையான நெல் வயல்களும், இதமான காற்றும், கிராமத்து மண் வாசனையும் அவனது பழைய நினைவுகளைத் தட்டியெழுப்பின. கவிதா அவனது மாமன் மகள். சிறுவயதிலேயே இவர்கள் வளர்ந்ததும் திருமணம் செய்து வைப்பதாக ராஜாவின் மாமாவும் அவனது தந்தையும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள். அதனால் ராஜாவும் கவிதாவும் எந்தத் தடையுமின்றிப் பழகினார்கள்.
3/30
அந்தப் பழக்கம் காலப்போக்கில் காதலாகவும் மாறியது. வயல் வரம்புகளிலும், முத்துமாரி அம்மன் கோயில் ஆலமரத்தடியிலும், தாமரைக்குளக் கரையிலும் அவர்கள் சேர்ந்து திரிந்த காலங்கள் ராஜாவின் மனக்கண்ணில் நிழலாடின. ராஜா கவிதாவைப் பிரிந்திருந்த சந்தர்ப்பங்கள் இரண்டு தான். ஒன்று அவள் பூப்படைந்த அந்தச் சில நாட்கள். மற்றையது அவன் வெளிநாடு சென்ற இந்தப் பதின்மூன்று மாதங்கள். இனிமேல் கவிதாவைப் பிரியப் போவதில்லை எனத் திடமான முடிவெடுத்திருந்தான்.
4/30
ராஜா தனது விருப்பத்துடன் வெளிநாட்டுக்குச் செல்லவில்லை. ராஜாவின் அப்பா இறந்த பின்னர் அவன் தனிமரமாகிப் போனான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ராஜாவின் மாமா, அவனது அப்பாவுக்குக் கொடுத்த வாக்கையும் மீறிக் கவிதாவை வேறு ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினார். சொந்தக்காரர்கள் என்றால் கவிதாவைத் திருமணம் செய்து ராஜாவைப் பகைக்க மாட்டார்கள் என்று தெரிந்து பக்கத்து ஊரிலிருந்த வசதியான குடும்பத்துப் பையன் ஒருவனைக் கவிதாவுக்குக் கட்டிவைக்க நினைத்தார்.
5/30
இது தெரிந்த கவிதா, ராஜாவிடம் வந்து கண்ணீர் விட்டுக் கதறினாள். அதனால் ராஜா மாமாவிடம் சென்று காரணத்தை வினவினான். தன்னிடம் மிகப்பெரிய வசதிகள் இல்லாத காரணத்தால் தான் மாமா தனக்குப் பெண் தர மறுக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்ட ராஜா, தனக்கு இரண்டு வருடங்கள் அவகாசம் தரும்படியும் கவிதாவிடம் சென்று தனக்காகக் காத்திருக்கும்படியும் கூறிவிட்டு வெளிநாடு புறப்பட்டான். மகிழ்ச்சியடைந்த அவனது மாமா நிறையச் சம்பாதித்து வளமுடன் வா என்று அவனை ஆசீர்வதித்தார். ராஜாவைப் பிரிய விரும்பாத கவிதா அரைகுறை மனதுடன் அவனை வழியனுப்பி வைத்தாள்.
6/30
இவ்வாறாகப் பழைய நினைவுகள் மனதைச் சூழ்ந்த நிலையில் தூரத்தில் யாரோ தன்னை அழைப்பது போல் ஒரு குரல் கேட்டது.
7/30
“ராஜா, ராஜா“
8/30
அட இது கவிதாவின் குரல் ஆயிற்றே என்று ராஜா நின்றான். அவனது காதுகளை அவனாலேயே நம்ப முடியவில்லை. வயலின் நடுவில் இருந்த அந்தப் பெரிய துலாவுக் கிணற்றின் அருகில் இருந்து கவிதா ஓடி வந்தாள். நிலவொளியில் அவளது முகம் வெளிறிப் போய்த் தெரிந்தது. ராஜாவுக்குக் கவிதாவைக் கட்டிப்பிடித்து அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் ஓடிவந்த கவிதாவே ராஜாவின் மார்பில் முகம் புதைத்தவாறு அழத் தொடங்கினாள். அவளது உடல் பனிக்கட்டியைப் போலச் சில்லிட்டுக் கிடந்தது. இருவரது கண்களில் இருந்தும் ஆனந்தக் கண்ணீர் பொழிந்தது.
9/30
“கவிதா, நம்ம ஆயுசு முழுக்க உக்காந்து சாப்பிடக்கூடிய அளவுக்குச் சம்பாதிச்சு வந்திருக்கேன். இனிமேல் உன்னைப் பிரிஞ்சு எங்கேயும் போக மாட்டேன். முதல் வேலையா மாமாகிட்ட போய் உன்னைப் பொண்ணு கேட்கிறேன்“ என்று ராஜா சொன்னதும் கவிதா மீண்டும் கேவிக்கேவி அழுதாள்.
10/30
“கவிதா அழாதையடி. என்னாச்சு, அதுதான் எல்லாம் சரியாகிப் போச்சில்ல. அப்புறம் ஏன் அழுகிறாய்?“
11/30
“இல்லை ராஜா. நீங்க வெளிநாட்டுக்குப் போன சரியா ரெண்டாவது வாரம், வயலுக்குத் தண்ணி இறைக்க வந்த எங்க அப்பா அந்தக் கிணத்தில தவறி விழுந்து செத்துப் போயிட்டார்“ என்று சொல்லியபடியே வயலின் மத்தியில் இருந்த அந்தக் கிணற்றைக் காட்டினாள்.
12/30
ராஜாவால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மாமா இறந்த துக்கத்தை விட இந்த நள்ளிரவிலும் அவள் அந்த இருண்ட கிணற்றடியிலேயே தனியாக இருந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.
13/30
“இல்லை ராஜா. நீங்க நினைக்கிறது மாதிரி அப்பாவை நினைச்சுக்கிட்டு நான் இங்க நிற்கலை. நீங்க வருவீங்கள் எண்டு எனக்குத் தெரியும். அதனால தான் உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருந்தன்“ என்றாள் கவிதா.
14/30
“என்னடி சொல்லுறாய், நான் வருவேனெண்டு உனக்கு முதல்லயே தெரியுமா? நான் தான் உனக்குக் கடதாசியே அனுப்பலயே. நான் கடதாசி அனுப்பியிருப்பன், ஆனால் இந்த ரெண்டு வருசத்தில நான் அனுப்பின எந்தக் கடதாசிக்கும் உன்னட்டை இருந்து பதில் வராததால நான் இப்ப கடதாசியே அனுப்பாம வந்திட்டன். திடீர்னு என்னைப் பாக்கிற உங்களுக்கெல்லாம் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம்னு இருந்தேன். ஆனால் அதுக்குள்ள மாமாவுக்கு இப்படி ஆகும்னு நினைச்சுக் கூடப் பாக்கலை“ சொல்லிக்கொண்டே ராஜா ஒரு பெருமூச்சு விட்டான்.
15/30
“தெரியும் ராஜா. நீங்க அனுப்பின எல்லாக் கடதாசியையும் நான் பாத்திருக்கன். ஆனா எனக்குப் பதில் போட ஏலாமப் போச்சுது. ஒருமாதிரி நீங்க எனக்கு மறுபடியும் கிடைச்சிட்டீங்கள்.“
16/30
“கவிதா, நீ எதைப் பற்றியும் யோசிக்காத. உன்னைக் கண்கலங்காமக் கடைசி வரைக்கும் என்னோட கண்மணி போலப் பத்திரமா வைச்சுப் பாத்துக்குவேன்.“
17/30
“எனக்குத் தெரியும் ராஜா. சரி, நீங்க போகும் வரைக்கும் ஊரில நடந்ததைச் சொல்லுறன்“ என கவிதா ஆரம்பித்தாள்.
18/30
“இண்டைக்கே எல்லாத்தையும் சொல்ல வேணாம் கவிக்குட்டி. இனிமேல் ஆயுசு பூராவும் உன்கூடத் தான் இருக்கப் போறேன். இப்பவே எல்லாத்தையும் சொல்லி முடிச்சா அப்புறமாப் பேசுறதுக்கு எதுவுமே இருக்காது“ என ராஜா சிரித்தான்.
19/30
இப்படியே அவர்கள் பேசிக்கொண்டே நேரம் போனது தெரியாமல் ராஜாவின் பழைய வீட்டுக்கு வந்தார்கள். வீட்டின் முற்றத்தில் நின்றவாறே அவனுடன் மேலும் பல விடயங்களைச் சுவாரசியமாகப் பேசிவிட்டு தூரத்தில் சேவல் கூவும் சத்தம் கேட்டதும் கவிதா பதற்றமடைந்தாள்.
20/30
“ராஜா, நீங்கள் வடிவாய்ப் படுத்து நித்திரை கொள்ளுங்கோ. நான் போய் விடியற் காலமைச் சாப்பாடு சமைச்சு வைச்சிட்டுப் போறன். மதியச் சாப்பாட்டை ஆச்சியிட்டை குடுத்து அனுப்புறன்“ என்று கூறிவிட்டுச் சென்றாள்.
21/30
மதிய நேரம். ராஜாவின் வீட்டு மரக்கதவு பலமாகத் தட்டப்படும் ஓசை கேட்டது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்த ராஜா விழித்துக் கொண்டு சோம்பல் முறித்துக் கொட்டாவி விட்டவாறே கதவைத் திறந்தான்.
22/30
“வாங்க ஆச்சி“ என்று அழைத்தான்.
23/30
“ஏனப்பு ராஜா, எப்பிடியப்பு இருக்கிறாய்? உன்னைப் பாத்து ரெண்டு வருசம் ஆச்சுதே. உன்ரை வளவுக் கேற்றுத் திறந்திருக்கெண்டு தான் காலமை வந்து பாத்தன். நீ நல்லா அசந்து நித்திரை கொண்டு இருந்தாய். அதுதான் தொந்தரவு செய்யாமப் போயிட்டு இப்ப வாறன். பயணக் களைப்பால காலமைல இருந்து சாப்பிடாமத் தூங்கியிருப்பாய். இந்தாப்பு இதைச் சாப்பிடு“ என்று பாட்டி தான் கொண்டுவந்திருந்த உணவை நீட்டினாள்.
24/30
உணவை வாங்கி அருகில் வைத்த ராஜா சிரித்துக்கொண்டே சொன்னான், “அதெல்லாம் இல்லை ஆச்சி. காலமை கவிதா வந்து சமைச்சு வைச்சிட்டுத் தான் போனாள். நானும் வயிறு முட்டச் சாப்பிட்டேன்“ என்றபடி தனது சமையலறையைக் காட்டினான்.
25/30
“என்னப்பு சொல்லுறாய்? நீ என்ரை கவிதாவைப் பாத்தியா? ஏற்கனவே ஊரில ரெண்டு மூணு பேரு அவளை இருட்டுக்க பாத்ததாச் சொன்னாங்கள். நான் தான் நம்பேல்லை. கவிதா செத்துப் போய் ரெண்டு வருசம் ஆச்சுதப்பு. நீ வெளிநாட்டுக்குப் போன அண்டைக்கு இரவே அவளின்ரை அப்பன் அவளுக்கு கட்டாயக் கல்யாணம் செய்யப் பாத்ததாலை அவள் ஊரு வயல்க் கிணத்துக்கை விழுந்து தற்கொலை செஞ்சுக்கிட்டாளப்பு“ என்று கிழவி நிலத்தில் விழுந்து கதறித் துடித்து அழுதாள்.
26/30
ராஜாவின் மூளை சில விநாடிகள் செயலிழந்தது. அவன் நின்ற இடத்திலேயே உறைந்து போனான். இருதயத் துடிப்பு நின்று மீண்டும் துடிப்பது போலிருந்தது. அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கிடையில் கவிதாவின் பாட்டி அவனை அழைத்துச் சென்று அவளது வீட்டைக் காட்டினாள். அங்கே கவிதாவின் படத்துக்கும் அவனது மாமாவின் படத்துக்கும் மாலை போடப்பட்டிருந்தது. கவிதாவின் படத்தைப் பார்த்ததும் ராஜாவின் தொண்டைக்குள் உயிர் இறங்கியது.
27/30
பாட்டி தொடர்ந்து அழுதுகொண்டே சொன்னாள், “அவளோட அப்பன் நீ போனதும் உனக்குத் தந்த வாக்கையும் மீறி அவளுக்கு இன்னொருத்தனோட கல்யாணம் பண்ணி வைக்கப் பாத்தாரப்பு. கவிதாவையும் அறைக்குள்ள பூட்டி வைச்சு அடுத்த நாளே தாலி கட்ட ஏற்பாடு பண்ணினார். எப்படியோ ராத்திரியோட ராத்திரியா அங்கயிருந்து தப்பிச்சுப் போன என்ரை கவிதா, அடுத்த நாள் அந்தக் கிணத்துக்கை பொணமாத் தான் கிடந்தாள். மகளின்ரை சாவைத் தாங்க ஏலாம சரியா இரண்டாவது கிழமை அவளின்ரை அப்பனும் அதே கிணத்துக்கை விழுந்து செத்துப் போனார்.“
28/30
இதையெல்லாம் கேட்ட ராஜாவுக்குத் தான் நேற்று இரவு முழுவதும் ஒரு ஆவியுடன் பேசிப் பழகியிருக்கிறோம் என்ற உண்மை மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. அவளது குளிர்ந்த உடல், அந்தக் கிணற்றடி, சேவல் கூவியதும் அவளுக்கு வந்த பதற்றம் என ஒவ்வொன்றும் அவனது நினைவில் வந்து மோதின. அந்த ஊரே அலறும்படி கத்திக் கத்தி அழுதான். வானமும் அதிரும்படி கதறித் துடித்தான். பழைய ஞாபகங்களைக் கூறி அழுது, இறுதியில் மயக்கம் போட்டு நிலத்தில் சரிந்தான்.
29/30
அடுத்த நாள் அவனுக்கு மயக்கம் தெளிந்த போது அருகில் யாருமில்லை. வீட்டைச் சுற்றிக் காரிருள் கவ்வியிருந்தது. வெளியே குளிர்காற்று சுழன்றடித்தது. எங்கோ வெகு தொலைவில் இருந்து கவிதாவின் குரல் மட்டும் மிகத் தெளிவாக ஒலித்துக் கொண்டிருந்தது.
30/30
★