 |
|
ரஷிய மொழியில் முதல் பதிவு: ஜனவரி 1884 ஆங்கிலத்தில் மொழிமாற்றம்: ? தமிழாக்கம்: 2022, ஷான் உதே |
“காற்று வீச ஆரம்பித்துவிட்டது நண்பர்களே. இருளவும் ஆரம்பிக்கின்றது. எல்லாம் மோசமாவதற்குள் நாங்கள் புறப்பட்டுவிடுவோமா?” 1 |
பழைய பர்ச்மரங்களின் மஞ்சள் இலைகளுக்கூடாக காற்று உல்லாசமாக ஓடித்திரிந்தது. இலைகளிலிருந்து தடிமனான மழைத்துளிகள் எங்கள் மீது விழுந்தது. எங்களில் ஒருவர் களிமண் மண்ணில் தடம் நழுவியதால், விழுவதிலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக ஒரு பெரிய சாம்பல் சிலுவையை பற்றிக்கொண்டார். 2 |
“யெகோர் குர்யாஸ்நொறுகோவ், குதிரை வீரரும் சபையின் பெயரளவிலான அங்கத்தினருமான... அந்த மனிதரை எனக்கு தெரியும். அவர் தனது மனைவியை நேசித்தார். அவர் ஸ்டானிஸ்லாவ் ரிப்பன் அணிந்திருப்பார். அவர் எதுவும் வாசித்ததில்லை. அவரது செரிமானம் நன்றாக வேலை செய்தது. வாழ்க்கை நன்றாக இருந்தது. இல்லையா? அவர் இறப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று யாராவது நினைத்திருப்பார்கள். ஆனால் ஐயோ! விதி அவர் மீது ஒரு கண் வைத்திருந்தது. பாவம் மனிதன். அவரது ஆழமாக அவதானிக்கும் பழக்கவழக்கங்களுக்கு அவரே பலியாகிவிட்டார்.” அவர் தொடர்ந்து வாசித்தார். 3 |
“ஒரு முறை, சாவித்துவாரத்தினூடே காது கொடுத்து கேட்டுக்கொண்டிருந்தபொழுது, அந்த கதவினால் தலையில் ஒரு இடி விழுந்து அவருக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டு உடனே இறந்துவிட்டார்.” (அவருக்கு மூளை கூட இருந்தது) 4 |
“இங்கே, இந்தக்கல்லறையின் கீழ், தனது தொட்டில் காலத்திலிருந்தே வசனங்களையும் கல்வெட்டுகளையும் வெறுத்த ஒரு மனிதன் உறங்கிக்கிடக்கிறார். அவரை கேலி செய்வது போல் அவரது கல்லறை முழுவதும் வசனங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கே யாரோ வருகிறார்கள்!” 5 |
சவரம் செய்யப்பட்ட நீலச்சிவப்பு நிறம் கலந்த முகத்துடன், இழிந்த மேலங்கி அணிந்தபடி ஒரு மனிதன், எங்களை முந்திச்சென்றார். அவர் கவசத்தின் கீழ் ஒரு போத்தல் இருந்தது. ஒரு தொத்திறைச்சி அவரது பாக்கெட்டிலிருந்து வெளியே தொங்கிக்கொண்டிருந்தது. 6 |
“நடிகர் முஷ்கினின் கல்லறை எங்கே?” என்று கரகரத்த குரலில் எங்களிடம் கேட்டார். 7 |
நாங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோன நடிகர் முஷ்கினின் கல்லறையை நோக்கி அவரை அழைத்துச்சென்றோம். 8 |
“நீங்கள் ஒரு அரசாங்க உத்தியோகத்தர் என்று நாங்கள் நினைக்கிறோம்?” என்று அவரிடம் கேட்டோம். 9 |
“இல்லை, ஒரு நடிகர். இப்போதெல்லாம் நடிகர்களை, தேவாலயங்களின் உத்தியோகத்தினர்களிலிருந்து வேறுபடுத்துவது கடினம். நீங்கள் அதை கவனித்ததில் சந்தேகமில்லை. இது பொதுவானது, ஆனால் இது அரசாங்க எழுத்தாளர்களுக்கு மிகவும் பெருமையாக இருக்காது.” 10 |
நடிகரின் கல்லறையை நாங்கள் சிரமத்துடன் கண்டுபிடித்தோம். அது நிலத்தினுள் அமிழ்ந்து, களைகளால் நிரம்பி, கல்லறையின் அனைத்து தோற்றத்தையும் இழந்துவிட்டிருந்தது. ஒரு மலிவான, சிறிய சிலுவை கரல் கட்டிப்போய், பச்சைப்பாசியால் மூடப்பட்டு, உறைபனியால் கருமையாக்கப்பட்டு, வயதாகி, சோர்வடைந்து , நோய்வாய்ப்பட்டது போல் தோற்றமளித்தது. 11 |
“...மறந்துபோன நண்பர் முஷ்கின்...” நாங்கள் வாசிக்கிறோம். 12 |
காலம் இல்லாததை அழித்துவிட்டு மனிதனின் பொய்யை திறுத்திவிட்டது. 13 |
“அவரது நினைவுச்சின்னத்திற்காக நடிகர்களிடமிருந்தும், பத்திரிகையாளர்களிடமிருந்தும் சந்தா சேர்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் அந்த பணத்தைக்குடித்து தொலைத்துவிட்டார்கள், அன்பான தோழர்களே...” என்று பெருமூச்சு விட்டார் அந்த நடிகர். பின் தரையில் குனிந்து, முழங்கால்களில் ஊன்றியபடியும் அவரது தொப்பியினாலும் ஈரமான பூமியைத்தொட்டு தலை வணங்கினார். 14 |
“எப்படி சொல்கிறீர்கள். குடித்துவிட்டார்களா?” 15 |
“அது மிகவும் எளிது. அவர்கள் பணத்தைச்சேகரித்து, அதைப்பற்றி செய்தித்தாளில் ஒரு பந்தியை வெளியிட்டு, மீதமுள்ள தொகையை மதுபானங்களுக்கு செலவு செய்து விட்டனர். நான் அவர்களை குறை கூறுவதற்காக இதைச்சொல்லவில்லை. அது அவர்களுக்கு நல்லது செய்திருக்கும் என்று நம்புகிறேன், அன்பர்களே! அவர்களுக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் அவருக்கு நித்திய நினைவு உருவாக வேண்டும்.” 16 |
“குடிப்பழக்கம் என்பது உடல்நலக்குறைவு, நித்திய நினைவு என்பது சோகத்தைத்தவிர வேறில்லை. கடவுள் நமக்கு ஒரு காலத்திற்கு நினைவைக்கொடுத்தார், ஆனால் நித்திய நினைவகள், அடுத்து என்ன?” 17 |
“நீங்கள் சரியாக சொன்னீர்கள். முஷ்கின் ஒரு பிரபலமான மனிதர். சவப்பெட்டிக்கருகில் பன்னிரண்டு மலர்வளையங்கள் இருந்தன, அவர் ஏற்கனவே மறக்கடிக்கப்பட்டவர். அவர் யாரிடம் அன்பாக இருந்தாரோ அவர்கள் அவரை மறந்துவிட்டார்கள், ஆனால் அவர் யாரை காயப்படுத்தினாரோ அவர்கள் அவரை நினைவில் வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, நான் அவரை ஒருபோதும் மறக்க மாட்டேன், ஏனென்றால் அவரிடமிருந்து எனக்கு தீமை மட்டுமே கிடைத்தது. இறந்தவர் மீது எனக்கு எந்த அன்பும் இல்லை.” 18 |
“அவர் உனக்கு என்ன கெடுதல் செய்தார்?” 19 |
“பெரிய தீங்கு!” பெருமூச்சு விட்டார் அந்த நடிகர். மேலும் அவரது முகத்தில் கசப்பானதொரு வெறுப்பு பரவியது.“எனக்கு, அவர் ஒரு வில்லன் மாத்திரமல்ல ஒரு அயோக்கியனும் கூட. சொர்க்க ராஜ்யம் அவருடையதாகட்டும்! அவரைப்பார்த்தும், அவர் சொல்வதைக்கேட்டும் நான் ஒரு நடிகனானேன்.” 20 |
“அவர் தனது கலையை பாவித்து, ஒரு நடிகரின் ஆடம்பரமான வாழ்க்கையை உதாரணம் காட்டி கவரவைத்து, என்னை என் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தார். எல்லா வகையான விஷயங்களையும் எனக்கு உறுதியளித்தார், கண்ணீரையும் துக்கத்தையும் கொண்டு வந்தார்.” 21 |
“ஒரு நடிகரின் விதி கசப்பானது! நான் இளமை, நிதானம், தெய்வீக சாயல் ஆகியவற்றை இழந்துவிட்டேன். என்னை ஆசுவாசிப்படுத்திக்கொள்ள எனக்கென்று ஒரு அரை பைசா கூட இல்லை. என் காலணிகளூடாக குதிக்கால் தொங்கிக்கொண்டிருக்கின்றன. என் உள்ளாடைகள் உராய்ந்து ஒட்டுப்போடப்பட்டுள்ளன. என் முகம், நாய்கள் கடித்துக்குதறியது போலத்தெரிகிறது. என் தலை பல சுதந்திர சிந்தனைகளாலும் முட்டாள்தனங்களாலும் நிறைந்துள்ளது.” 22 |
“என் தீய மேதை! என் நம்பிக்கையை அவன் கொள்ளையடித்தான்! எனக்கு திறமை இருந்திருந்தால், அது ஏதோ ஒன்றுதான், ஆனால் இப்போது இருக்கிறபடி, நான் வீணாக அழிந்துவிட்டேன். குளிர்ச்சியாக இருக்கிறது மரியாதைக்குரிய நண்பர்களே.” அவன் தன் பாட்டிலில் இருந்து ஒரு வாய் விழுங்கினான்.“உங்களுக்கும் குடிக்க வேண்டுமா? அனைவருக்கும் போதுமானதாக உள்ளது. அவன் ஆன்மா சாந்தி அடையும் வரை முழுவதும் குடிப்போம்!” 23 |
“எனக்கு அவரைப்பிடிக்கவில்லையென்றாலும், அவர் இறந்துவிட்டாலும், உலகத்தில் எனக்கு இருந்த ஒரேயொருவர் அவர்தான், ஒரேயொருவர். நான் அவரைப்பார்த்து இதுதான் கடைசி தடவை. நான் விரைவிலேயே குடித்து இறந்து போய்விடுவேன் என்று வைத்தியர்கள் சொல்கிறார்கள், அதனால் இதோ நான் விடைபெற வந்திருக்கின்றேன். எதிரிகளை மன்னிக்கவேண்டும்.” 24 |
இறந்துபோன முஷ்கினுடன் நடிகரை உரையாட விட்டுவிட்டு நாங்கள் தொடர்ந்தோம். நன்றாக குளிர்ந்த மழை பெய்யத்தொடங்கியது. 25 |
சரளைக்கற்களால் நிறைந்திருந்த, பிரதான வீதிக்குத்திரும்பும் இடத்தில் ஒரு இறுதி ஊர்வலத்தைச்சந்தித்தோம். வெள்ளை காலிகோ சட்டைகளையும், இலைகள் வெளியே ஒட்டிக்கொண்டிருக்கும் சேற்று உயரமான பூட்ஸையும் அணிந்த நான்கு பேர், பழுப்பு நிற சவப்பெட்டியொன்றை சுமந்து சென்றுகொண்டிருந்தனர். இருட்டிக்கொண்டிருந்தது, அவர்கள் தடுமாறி தங்கள் சுமையை ஆடியபடி விரைந்தனர். 26 |
“நாங்கள் இங்க நடந்து வந்து ரெண்டு மணி நேரமே ஆகுது. இது மூன்றாவது ஊர்வலம். நாங்கள் வீட்டுக்குப்போகலாமா நண்பர்களே?” 27 ★ |
 |