 |
|
மூல எழுத்தாளர்: தெரியவில்லை மீள எழுதியது: உதயன் |
முன்பொரு காலத்தில், ஒரு காட்டில், ஒரு நரி வசித்து வந்தது. ஒரு நாள் காடு முழுவதும் உணவை தேடி நடந்த அந்த நரிக்கு தாகம் ஏற்பட்டது. பல தூரம் மேலும் நடந்து இறுதியில் ஒரு குளத்தைக்கண்டது. 1 |
குளத்தைக்கண்ட நரி மகிழ்ந்துபோய் இந்த குளத்திலிருந்து நன்றாக தண்ணீர் குடித்துவிட்டு திரும்பிச்செல்லலாம் என்று நினைத்தது. பின் தண்ணீர் தேவையளவு குடித்துவிட்டு குளத்திலிருந்து வெளியேற முயன்றபோது அதற்கு நினைத்ததுபோலே வெளியே வரமுடியவில்லை. அந்தக்குளத்திலிருந்து வெளியே ஏற படிகளும் இருக்கவில்லை. பாறைகளும் வழுவழுப்பாக இருந்தது. 2 |
இப்பொழுதுதான் நரி தன் தவறை உணர்ந்தது. குளத்தினுள் நுழையும்போது தனக்கு தாகமாக இருந்ததால் அவசரத்தில் வழுக்கும் பாறைகளில் தான் வழுக்கிக்கொண்டே குளத்திற்குள் வந்ததை உணர்ந்தது. 3 |
பயந்துபோன நரி சுற்றும் முற்றும் பார்த்தது. எல்லா இடங்களிலும் வழுக்கும் பாறைகள் மட்டுமே இருந்தன. வெளியேற வழி இல்லை. இப்போது, நரியால் குளத்தை விட்டு வெளியே வர முடியவில்லை. 4 |
‘இந்தக்குளத்திலிருந்து எப்படி வெளியே போவது? ஏற படிகளும் இல்லை, பிடித்துக்கொண்டு மேலே எற ஓர் செடியோ மரக்கொப்போ எதுவும் இல்லை. எப்படித்தான் இங்கிருந்து வெளியே போவது?’ என்று நரி தனக்குள் நினைத்துக்கொண்டது. 5 |
நரி அவ்வாறு குளத்திலிருந்தபடி தப்பிப்போவது எப்படி என்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது, அவ்வழியே ஒரு ஆடு வந்தது. 6 |
நரியால் குளத்திலிருந்து வெளியே வர முடியவில்லை என்பதை அறியாத ஆடு, நரியிடம் கேட்டது; “நண்பரே, இந்தக்குளத்தில் உள்ள தண்ணீர் குடிக்க நல்ல தண்ணீரா?” 7 |
ஆட்டைக்கண்டதும் மகிழ்ந்த நரி, தான் உடனே அங்கிருந்து தப்பிக்க ஒரு வழியை யோசித்தது. நரி உற்சாகமாக ஆட்டின் கேள்விக்கு பதிலளித்தது; “இந்த குளத்திலிருந்து வரும் தண்ணீர் நான் இதுவரை குடித்ததிலேயே சிறந்தது. நீயும் இங்கே வந்து கொஞ்சம் தண்ணீர் குடி.” 8 |
நரியின் பதிலைக்கேட்ட ஆடு, வேறு எதையும் சிந்திக்காமல் குளத்துக்குள் இறங்கியது. ஆடு குளத்துக்குள் இறங்கியவுடன், நரி உடனடியாக ஆட்டின் முதுகில் ஏறித்தாவி குளத்தின் கரைக்கு வந்துவிட்டது. 9 |
சில நொடிப்பொழுதில் நடந்ததை ஆச்சரியத்தோடு பார்த்த ஆட்டுக்கு இப்பொழுது தான் நடந்தது என்ன என்று புரிந்தது. நரி தன்னை ஏமாற்றிவிட்டது என்று அதற்கு தெரிந்தது. நரியும் குளத்தின் கரையில் நின்று பெரிதாக சிரித்தது. 10 |
ஆடு தனக்குள் நினைத்துக்கொண்டது; ‘நான் என்ன முட்டாள். நரி சொன்னதை நம்பி, வேறு எதையும் பார்க்காமல் இந்தக்குளத்தின் இறங்கிவிட்டேன். இப்போது எப்படி தான் கரைக்கு போவது?’ 11 |
ஆடு துயரத்தில் அழுதபடி நரியிடம், “நீ ஏன் என்னை ஏமாற்றினாய்? இந்தக்குளத்திலிருந்து யாரும் மேலே ஏற முடியாது என்பதை ஏன் என்னிடம் மறைத்தாய்?” என்று கேட்டது. 12 |
இதைக்கேட்ட நரி, தயக்கமின்றி, ஆட்டிடம் சொன்னது; “குளத்தினுள் இறங்குவதற்கு முன் நீ தான் அதை யோசித்திருக்க வேண்டும். என் மேல் ஏன் பழி சுமத்துகின்றாய்?” 13 |
உடனே ஆடு சொன்னது; “நான் உன்னை ஒரு நல்ல நண்பனாகப்பார்த்தேன். அதனால்தான் நீ சொன்னதை நம்பினேன். எப்படியாவது என்னை இங்கிருந்து காப்பாற்று.” 14 |
இதைக்கேட்ட நரி, ஆட்டிடம், “நீ இதுவரை சந்தித்திராத என்னை ஏன் நம்பினாய்? என் உயிர் எனக்கு மீண்டும் கிடைத்தது அதிர்ஷ்டம். உன்னைக்காப்பாற்ற எனக்கு நேரமில்லை. முடிந்தால் உன்னைக்காப்பாற்றிக்கொள்,” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து ஓடிப்போய்விட்டது. 15 |
என்ன செய்வது என்று தெரியாமல் ஆடு, இரவு முழுவதும் குளத்தில் இருந்தபடி அழுதுகொண்டிருந்தது. 16 |
மறுநாள், ஆடு வீடு திரும்பாததைக்கண்ட அதன் உரிமையாளர், காட்டின் வழியாக ஆட்டைத்தேடி வந்தார். 17 |
குளத்திலிருந்து ஆட்டின் அழுகை சத்தம் கேட்டதும், அவர் மகிழ்ச்சியடைந்தார். குளத்திலிருந்து ஆட்டை மீட்டு வீட்டிற்கு எடுத்துச்சென்றார். 18 |
இந்தக்கதையின் அர்த்தம்; ஒருவருக்கு உதவி செய்வதற்கு முன், அவர்களின் நோக்கங்களைப்பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும். 19 ★ |
 |