 |
|
மூல எழுத்தாளர்: தெரியவில்லை மீள எழுதியது: உதயன் |
முன்னொரு காலத்தில், ஒரு காட்டில், ஒரு சிறிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் நற்பாக பழகும் ஆமை ஒன்று வசித்து வந்தது. அவசியமானதோ அவசியமற்றதோ என்றில்லாமல் எப்போதும் ஏரிக்கு வரும் அனைத்து உயிரினங்களுடனும் அந்த ஆமை பேசிக்கொண்டே இருக்கும். 1 |
அப்படி இருக்கும் பொழுது ஒருநாள் இரண்டு கொக்குகள் அந்த ஏரிக்கு நீர் அருந்த வந்தன. ஆமை அவைகளுடன் மிக விரைவாக நட்பு கொண்டது. கொக்குகளும் நாளாந்தம் அந்த ஏரிக்கு வர ஆரம்பித்தன. ஆமையும் அந்த கொக்குகளும் ஊர் வம்புகள் பல பேசி சிரித்து மகிழ்ந்தன. அப்படியே பல நாட்கள் கடந்து போயின. கொக்குகளும் அந்த ஏரியில் நிரந்தரமாக வசிக்க ஆரம்பித்தன. 2 |
இப்படியிருக்கும்போல், அந்த காட்டில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. அந்த வருடம் மழை பெய்யவில்லை. ஏரியில் உள்ள தண்ணீரும் வறண்டு போகத்தொடங்கியது. ஏரியில் தண்ணீர் குறையத்தொடங்கியதும், அதைச்சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களும் புதிய இடத்தை தேடிச்செல்ல ஆரம்பித்தன. 3 |
கொக்குகளும் செல்ல முடிவு செய்தன. அவைகள் தங்கள் நண்பன் ஆமையிடம், “நண்பா, நாங்களும் வேறொரு ஏரிக்குப்போகிறோம். இந்தச்சூழ்நிலையில் இனிமேல் இங்கே தங்க முடியாது. உன்னிடம் விடைபெற வந்திருக்கிறோம். வறட்சி முடிந்து, ஏரி முன்பு போல நீரால் நிரம்பும்போது நாங்கள் திரும்பி வருவோம். பிறகு மீண்டும் சந்திப்போம்,” என்றன. 4 |
இதைக்கேட்டதும், ஆமையால் வலியைத்தாங்க முடியவில்லை. அது கொக்குகளிடம், “இந்த ஏரியில் என்னை எப்படி தனியாக விட்டுவிட்டுப்போகப்போகின்றீர்கள்? இன்னும் சில நாட்களில், ஏரியில் மீதமுள்ள தண்ணீரும் வறண்டுவிடும். உணவு இல்லாமல் நான் எப்படி வாழ்வேன்? நாம் மீண்டும் ஒருவரை ஒருவர் இனிமேல் பார்க்க மாட்டோம் என்று நினைக்கின்றேன்,” என்று சொன்னது. 5 |
ஆமையின் வார்த்தைகளைக்கேட்ட கொக்குகள், “நாங்கள் என்ன செய்ய முடியும் என் நண்பரே? எங்களைப்போல உன்னால் பறக்க முடியாது. அதனால்தான் உன்னை எங்களுடன் அழைத்துச்செல்ல முடியாது,” என்றன. 6 |
இதைக்கேட்ட ஆமை, “என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. நீங்கள் ஒப்புக்கொண்டால், நான் உங்களுக்குச்சொல்கின்றேன்,” என்றது. 7 |
இதைக்கேட்ட கொக்குகள், “உங்களை எங்களுடன் அழைத்துச்செல்ல முடிந்தால், நாங்கள் அழைத்துச்செல்வோம். திட்டம் என்னவென்று சொல்லுங்கள்,” என்றன. 8 |
ஆமை உடனே தன் நண்பர்களிடம் சொன்னது: “ஒரு நீண்ட மரக்கிளையை எடுத்து அதன் இரு முனைகளிலும் இரண்டுபேரும் பிடியுங்கள். அதை நான் என் வாயால் நடுவில் பிடித்துக்கொள்கின்றேன். பிறகு நீங்கள் என்னுடன் பறக்க வேண்டும்.” 9 |
ஆமையின் தந்திரம் கொக்குகளுக்குப்பிடித்திருந்தது, ஆனால் ஆமைக்கு அளவுக்கதிகமாக பேசும் பழக்கம் உள்ளதனால், அதனை இப்படி அழைத்துச்செல்ல கொக்குகள் விரும்பவில்லை. 10 |
எனவே கொக்குகள் ஆமையிடம், “நண்பா, எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் உன்னை எங்களுடன் அழைத்துச்செல்வது சரியாக இருக்காது என்று நாங்கள் நினைக்கின்றோம். பறக்கும் போது நீ தற்செயலாகப்பேச வாயைத்திறந்தால், நீ கீழே விழுந்து விடுவாய். அது ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தும்,” என்றன. 11 |
கொக்குகளின் பதிலைக்கேட்ட ஆமை, “அதற்குப்பயப்படாதீர்கள். நான் ஒருபோதும் வாயைத்திறந்து ஆபத்தை வரவழைக்க மாட்டேன். தயவுசெய்து என்னையும் உங்களுடன் அழைத்துச்செல்லுங்கள்” என்றது. 12 |
ஆமையின் வார்த்தைகளை நம்பி, கொக்குகள் சொன்னன: “நாங்கள் நிச்சயமாக உன்னை எங்களுடன் அழைத்துச்செல்வோம். ஆனால் உன் வாயைத்திறப்பதன் ஆபத்தை மீண்டும் உனக்கு நினைவூட்டுகின்றோம். எனவே எந்த சூழ்நிலையிலும் நீ வாயைத்திறந்து பேசக்கூடாது.” 13 |
இதைச்சொல்லிவிட்டு, கொக்குகள் ஒரு மரக்கிளையை உடைத்து அதன் இரு முனைகளையும் பிடித்துக்கொண்டன. நேரத்தை வீணாக்காமல், ஆமையும் மரக்கிளையின் நடுவில் கடித்து பிடித்துக்கொண்டது. பின், கொக்குகள் ஆமையுடன் பறந்து செல்ல ஆரம்பித்தன. 14 |
ஆமையின் பாரம் காரணமாக கொக்குகளினால் அதிக உயரத்தில் பறக்க முடியவில்லை. அவை மிகவும் தாழ்வாகவே பறந்தன. இதுவரை, தன் வாழ்நாளில் கீழிருந்து மட்டுமே எல்லாவற்றையும் பார்த்து வந்த ஆமைக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பெரிய மரங்கள், விலங்குகள் எல்லாம் சிறியதாகத்தெரிகின்றன. அந்த ஆமை தன் வாழ்நாளில் இவ்வளவு உயரத்தில் இருந்து இப்படி ஒரு காட்சியைப்பார்ப்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. 15 |
தன் மகிழ்ச்சியைப்பற்றி இப்போதே சத்தமாக சொல்ல வேண்டும் என்று ஆமைக்கு தோன்றியது. ஆனால் வாயைத்திறப்பதால் ஏற்படும் ஆபத்தை நினைவில் கொண்டு அது அமைதியாக இருந்தது. 16 |
இரு கொக்குகளும் ஆமையும் இப்போது ஒரு கிராமத்தின் மேலே பறந்து சென்றுகொண்டிருந்தன. ஆமை இன்னும் எல்லாக்காட்சிகளையும் ரசித்துக்கொண்டிருந்தது. கீழே பாதையில் போய்க்கொண்டிருந்த சில கிராமவாசிகள் இதைப்பார்த்துவிட்டார்கள். கொக்குகள் என்ன சுமந்து செல்கின்றன என்பது அவர்களுக்குப்புரியவில்லை. அவர்கள் இப்படி ஒரு காட்சியைக்கண்டது இதுதான் முதல் தடவையாக இருந்தது. 17 |
பின்னர் மேலே பார்த்துக்கொண்டிருந்த மனிதர்களுள் ஒருவன் கேட்டான்: “இந்த கொக்குகள் என்ன சுமந்து செல்கின்றன? துணி மூட்டைகளையா?” 18 |
இதைக்கேட்டுக்கொண்டிருந்த மற்றொரு நபர், “கொக்குகள் ஏன் துணி மூட்டைகளைச்சுமக்கின்றன? அவை சாப்பிடுவற்கு ஏதோ இரையைச்சுமந்து செல்கின்றன,” என்றான். 19 |
மேலே பார்த்துக்கொண்டிருந்த சில குழந்தைகள் கொக்குகள் இருக்கும் திசையில் ஓடத்தொடங்கினர். குழந்தைகளும் மகிழ்ச்சியாக ஓடி வருவதைக்கண்ட ஆமை, தானும் மிகவும் மகிழ்ந்துபோய், ஏதோ சொல்ல வாயைத்திறந்தது. ஆமை வாயைத்திறந்தவுடன், அது பிடியை இழந்து விழத்தொடங்கியது. 20 |
கொக்குகள் பயந்து போய்விட்டன. அவைகள் ஆமையை பிடிக்க உடனடியாக கீழே பறந்து சென்றன. 21 |
ஆமையும் ஒரு சதுப்பான இடத்தில் எந்த வித காயமும் இல்லாமல் விழுந்தது. ஆனால் மயங்கிப்போய் கிடந்தது. 22 |
கொக்குகளின் சொண்டுகளிலிருந்து என்ன விழுந்தது என்பதைப்பார்க்க ஆவலுடன் கிராம மக்கள் அதன் பக்கம் விரைந்தனர். அது ஒரு ஆமை என்பதை உணர்ந்ததும், அவர்கள் அதற்காக பரிதாபப்பட்டார்கள். கருணையுள்ள கிராமவாசிகள் மயக்கமடைந்த ஆமையைத்தூக்கி ஒரு ஏரியின் கரைக்கு கொண்டுச்சென்றனர். அதற்குள், ஆமையைத்தேடி கொக்குகளும் அங்கு வந்துவிட்டன. 23 |
ஏரிக்கரையில் ஆமை இருப்பதைக்கண்ட கொக்குகள் அதன் அருகில் அமர்ந்தன. சிறிது நேரம் கழித்து, ஆமை சுயநினைவு பெற்றது. ஆமை கண்களைத்திறந்தபோது, முதலில் பார்த்தது தன்னுடைய அன்புக்குரிய நண்பர்களைத்தான். 24 |
கொக்குகளைப்பார்த்ததும் ஆமை மிகவும் மகிழ்ச்சியடைந்தது. ஆனால் அவைகளுக்குக்கொடுத்த வாக்குறுதியைக்காப்பாற்ற முடியாமல் போனது அதற்கு வருத்தமாக இருந்தது. அதனால் ஆமை அமைதியாக இருந்தது. ஆமை கண்களைத்திறந்ததைக்கண்டதும் கொக்குகள் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் இருந்தன. 25 |
கொக்குகள் ஆமையிடம், “உன்னை மீண்டும் உயிருடன் பார்ப்பது அதிர்ஷ்டம். அந்த கிராம மக்கள் கருணையுடன் உன்னை இந்த ஏரிக்கு அழைத்து வந்தார்கள். வாயைத்திறப்பதால் ஏற்படும் ஆபத்தைப்பற்றி நாங்கள் முன்பே உனக்குச்சொல்லவில்லையா? இப்போது ஒரு பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளது,” என்றன. 26 |
இதைக்கேட்டதும், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ஆமை சொன்னது: “ஆமாம் நண்பர்களே, என்னை மன்னியுங்கள். தேவை ஏற்பட்டால் தவிர, நான் இனி பேச மாட்டேன் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். ஆனால் நாம் மூவரும் இங்கே இருந்தால் போதும்.” 27 |
ஆமையின் வார்த்தைகளைக்கேட்ட கொக்குகள், “நீ சொல்வது சரிதான். இப்போதைக்கு நாம் இங்கேயே தங்கலாம். புதியதொரு ஏரி தேடிப்போக வேண்டிய அவசியம் இல்லை,” என்றன. 28 |
அதன் பின் அந்த நண்பர்கள் மூவரும் அந்த ஏரியில் நீண்ட காலங்கள் மகிழ்ச்சியுடன் கழித்தனர். 29 |
இந்த கதையின் அர்த்தம்; எது பேசினாலும் சரியான நேரம் பார்த்து பேசவேண்டும். 30 ★ |
 |