 |
|
மூல எழுத்தாளர்: தெரியவில்லை மீள எழுதியது: உதயன் |
முன்னொரு காலத்தில், ஒரு ஊரில், ஒரு பாட்டி வாழ்ந்து வந்தார். அந்த பாட்டி நாளாந்தம் வீட்டில் வடை சுட்டு அதை விற்று அதில் வரும் பணத்தில் வாழ்ந்து வந்தார். 1 |
பாட்டி ஒரு மரநிழலில் இருந்து வடை விற்பதை பல நாட்களாக பார்த்திருந்த ஒரு காகம், ஒரு நாள் சரியான சமயம் பார்த்து வடையொன்றை திருடிக்கொண்டு பறந்து போனது. 2 |
அதேவேளையில், அருகிலுள்ள காட்டில் ஒரு தந்திரமான நரி வசித்து வந்தது. ஒரு நாள், காட்டில் ஏது உணவும் கிடைக்காததால் அது உணவுக்காக கிராமத்துக்குள் சென்றது. அப்போது ஒரு காகம் வாயில் எதையோ வைத்துக்கொண்டு பறப்பதைக்கண்டது. நரியும் காகம் பறக்கும் திசையிலே தானும் ஓடியது. இறுதியில் காகம் மரக்கொப்பொன்றில் வாயில் வடையுடன் அமர்ந்து கொண்டது. 3 |
வடையை கண்ட நரி, ‘ஆஹா! வடை! எப்படியாவது இந்த வடையை நான் காக்கையிடமிருந்து பறிக்கவேண்டும்.’ என்று யோசித்து, காகம் அமர்ந்திருந்த மரத்தை நோக்கி சென்று அதன் கீழ் அமர்ந்து கொண்டது. 4 |
‘இந்த காக்கையை பேச வைத்தால் அது வாயைத்திறக்கும். பின் வடை கீழே விழும். பின் நான் அதை எடுத்துக்கொண்டு ஓடிவிடலாம்,’ என்று நரி சிந்தித்தது. 5 |
நரி காக்கையிடம், “காக்கையே! காக்கையே! நான் இதற்கு முன்பு உன்னை இங்கு பார்த்ததில்லை. இந்தக்காட்டிற்குள் நீ வருவது இதுவே முதல் தடவையா?” 6 |
அப்பொழுதுதான் காகம் நரியைப்பார்த்தது. நரியைப்பார்த்ததும், காகம் பல வருடங்களுக்கு முன்பு ஒரு நரியால் ஏமாற்றப்பட்ட தனது பாட்டி காகத்தின் கதையை நினைவு கூர்ந்தது. வடையை விழ செய்வதற்காகவே நரி கேள்வியைக்கேட்கிறது என்பதை காகம் உடனடியாகப்புரிந்துகொண்டது. எனவே, காகம் நரியின் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. 7 |
நரி மேலும் சொன்னது. “உன்னைப்பார்த்ததில் மகிழ்ச்சி. உன் கருமையான நிறமும் சிறிய கண்களும் கவர்ச்சிகரமானவை. காட்டில் பயணம் செய்யும் போது கவனமாக இரு. காடு ஒரு ஆபத்தான இடம்.” 8 |
இதுபோன்ற வார்த்தைகளால் காகத்தின் நம்பிக்கையைப்பெற நரி தொடர்ந்து முயற்சித்தது. இப்பொழுதும் காக்கா எதுவும் சொல்லவில்லை. இது நரிக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அது மீண்டும் கேட்டது. 9 |
“காக்கைகள் அழகாக பாடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு காக்கைகளின் பாட்டு மிகவும் பிடிக்கும். உண்மையைச்சொன்னால் நரிகளால் பாடவே முடியாது. காகங்கள்தான் அழகாக பாடும். உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், எனக்காக ஒரு பாட்டு பாட முடியுமா?” 10 |
இப்பொழுது காகம் மனசுக்குள் சிரித்துக்கொண்டது. ‘இதே கேள்வி என் காக்கா பாட்டியிடமும் உனது நரிப்பாட்டன் கேட்டு ஏமாற்றிய கதை எனக்குத்தெரியும். அதனால் நான் உன்னிடம் ஏமாறப்போவதில்லை.’ 11 |
என்று, காக்கா வடையை காலால் பற்றிப்பிடித்துக்கொண்டு “கா...கா...கா...,” என்று பாடியது. நரிக்கு பெரும் ஏமாற்றமாக போய் காக்கையையே பார்த்துக்கொண்டு இருந்தது. 12 |
பாடி முடித்துவிட்ட காகம் காலில் இருந்த வடையை தனது அலகால் கொத்தி சாப்பிடத்தொடங்கியது. 13 |
காக்கையின் புத்திசாலித்தனத்தால் ஏமாந்துபோன நரி உடனே உணவு தேடி அங்கிருந்து ஓடிப்போய்விட்டது. 14 |
இந்த கதையின் அர்த்தம்; எங்கள் முன்னோர்களின் அனுபவங்களை நாங்கள் எங்களுக்கு பாடமாக எடுத்துக்கொள்ளவேண்டும். 15 ★ |
 |