 |
|
|
எனது பன்னிரண்டு வயதினில், என் முதல் நெடுந்தூர பயணமிது. அன்றுவரை வெளியுலகம் பார்த்திராத நான், அன்று பார்த்த புதிய புதுமைகளை, தெரிந்த மொழி துணை கொண்டு, உண்மைகளை தொலைக்காமல் இங்கு பதித்திருக்கிறேன். 1 |
வெறும் இரண்டு பக்கங்களில் தான் நினைவுகள் அடங்கும், ஒரே நாளில் கிறுக்கி தள்ளிவிடலாம் என்ற நினைப்பில் தொடங்கி, எழுத ஆரம்பிக்கப்பட்ட ஆக்கமிது. எதிர்பாராத விதமாக, அடிமனதின் ஆழத்தில் அழகாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த அந்த பசும் நினைவுகள், ஒன்றன்பின் ஒன்றாக சிரித்தபடி வெளியேறி, இன்று எட்டு வாரங்கள் கடந்த நிலையில், பன்னிரண்டு A4 பக்கங்களை நிரப்பியிருக்கின்றன. 2 |
நிகழ்வுகளில் 95 விகிதத்திற்கு மேலாக உண்மைச்சம்பவங்கள். ஆயினும், எழுத்தை அழகு படுத்துவதற்காக, கற்பனை வர்ணங்கள் சிலவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக தீட்டியிருக்கின்றேன். 3 |
அம்மாவின் உறவினர் பக்கம் இருந்து ஒரு திருமண அழைப்பிதழ் தபாலில் வந்து சேர்ந்தது. அது வருடம் 1976. சரியான மாதம் நினைவில் இல்லை. நான் எனது பதின்மூன்றாவது அகவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த அரைக்காற்சட்டை வயது அது. அரை நூற்றாண்டுக்கு முன்னே வந்து போன சுகமான காலங்கள் அவை. 4 |
யாழ்ப்பாணத்தில் திருமணம். இருநூற்று ஐம்பது மைல்கள் தூரே உள்ள ஒரு நகரில். அழைப்பு வந்த போதே வீட்டில் கொஞ்சம் அசமாத்தம். திருமணநாள், தபால் வந்த நாளிலிருந்து வெறும் மூன்று வாரங்களில் இருந்தது. முடிவெடுப்பதற்கு கால அவகாசம் பெரிதாக இருக்கவில்லை. எல்லோரும் கட்டாயம் போக வேண்டிய கிட்டிய உறவு முறை. ஆனால், எல்லோரும் போகமுடியாத சூழ்நிலை. கடைசி ஐந்து பிள்ளைகளும் பாடசாலை போய்க்கொண்டிருக்கும் காலம். யார் யார் போவது, யார் வீட்டில் ஒன்பது பேரும் தங்குவது என்ற பேச்சுக்களே ரெண்டு மூன்று நாட்கள் வீட்டில் உலா வந்து கொண்டு இருந்தது. இன்றிருப்பதுபோல் அன்று அங்கு வாடி வீடுகளோ விடுதிகளோ இல்லாத காலங்களாக இருந்தமையினால் அவை பெரிதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதாக இருந்தது. 5 |
ஒரு கட்டத்தில் அப்பா மாத்திரம் போவதாக ஓர் முடிவு. பின்னொரு நிலையில் அண்ணண், அக்கா எல்லோருடைய பெயரும் பரிந்துரைக்கப்பட்டு, இறுதியில், என்னை மாத்திரம் கூட்டிச்செல்வதாக அப்பா முடிவெடுத்தார். என்ன காரணங்கள் என்னை அந்த பயணத்துக்குள் சேர்க்க உதவின என்பது தெரியவில்லை. சில வேளைகளில், அம்மாவுக்கும் மாத்திரமல்ல, அப்பாவுக்கும் நான் செல்லப்பிள்ளையாக இருந்தேனோ என்னோவோ. 6 |
பிரயாணத்துக்குள் நான் சேர்க்கப்பட்ட நிகழ்வு ஒன்றே எனக்கு பெரிதாக இருந்தாலும், திருமணத்துக்காக எனக்கு புது அரை காற்சட்டையும், அரை கைச்சட்டையும், அவசர அவசரமாக சந்தியில் இருந்த தையல்காரரிடம் கொடுத்து தைக்கப்பட்டது, இன்னுமொரு இலவச இணைப்பு. ஆனாலும், அவரும் அவசரமாக தைத்தாரோ என்னவோ, அவர் தைத்தது என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இளவரசனாகிய எனக்கு பொருந்தாது என்று அந்த தையல்காரரிடம் நீண்ட காலம் கோபமாக இருந்தேன். 7 |
கொஞ்ச இடங்களில் நூல் கழன்று போய் கிடந்த எனது சாண்டில்சையும் இந்த சந்தர்ப்பத்தை பாவித்து புதிதாக மாற்றி விடலாம் என்ற ஒரு நப்பாசையும் இருந்தது. இருந்தாலும், வீணாக அப்பாவை போய் இதை கேட்டு, எனக்கு கிடைத்த பயணம் போகும் பெரிய சந்தர்ப்பத்துக்கு நானே சாவு மணி அடிக்காமல், மௌனமாக இருந்து விட்டேன். ஒரு தடவை நன்றாக சாண்டில்சை எடுத்து நுணுக்கமாக ஆராய்ந்த பொழுது, தெருமுனையிலிருக்கும் சப்பாத்துகாரரிடம் கொடுத்து தைத்துக்கொள்ளுமளவுக்கு இது ஒரு சின்ன பிரச்சனை தான் என, பயணத்துக்கு முன் ஒருநாள் அதை தைப்பித்துக்கொண்டேன். இது மனதுக்கு கொஞ்சம் நெருடலை தந்தாலும், அறையும் குறையுமாக இருந்த சாண்டில்ஸ் புதிதாகி விட்ட ஒரு நல்ல நிகழ்வும் நடந்தேறிவிட்டது. 8 |
அன்றைய காலங்கள், மீள்சுழற்சிகளும் மீள்பயன்பாடுகளும் நிறைந்த காலம். இன்று அது ஒரு பெரியதொரு விடயமாக பேசப்பட்டாலும், அன்று அது வாழ்க்கையோடு பின்னிப்போய் கிடந்த விடயம். எந்தப்பொருளும் இனி தேவைப்படாது என்று நிலை வருவதற்குள், அவை பல அவதாரங்களை எடுத்துவிட்டிருக்கும். வசதியுள்ளவர் வீடாயினும், வசதி குறைந்தவர் வீடாயினும், இது எல்லோர் வீட்டிலும் நடக்கும் சாதாரண விடயம். என்னுடைய சாண்ட்டில்ஸ்ஸை புதிதாக மாற்றாமல், பழயதை திருத்தி அணிந்தது சரி என்று எனக்கு இன்று தோன்றுகின்றது. 9 |
நானும் அப்பாவும் புறப்படுவதற்கான ஆயத்தங்கள் ஆரம்பமாகின. அம்மா எங்கள் உடைகளை தோய்த்து, மடித்து, அடுக்கி வைக்க ஆரம்பித்தார். அப்பா இரண்டு நாள் விடுமுறை கேட்டு பெற்று கொண்டார். நானும் பெருமையாக “யாழ்ப்பாணம் போகிறேன்” என்று சொல்லி, பாடசாலை அதிபரிடம் இரண்டு நாள் விடுமுறை அனுமதி பெற்றுக்கொண்டேன். மொத்தம் நான்கு நாட்கள், சனி ஞாயிறு உள்பட. அன்றைய நிலையில், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போகும் பயண ஏற்பாடுகள், இன்றைய நிலையில், இந்தக்கோடியிலிருக்கும் லண்டனிலிருந்து, அந்தக்கோடியிலிருக்கும் மெல்போர்ன் போகும் பயண ஏற்பாடுகளை விட கடினம். நான்கே நான்கு நாட்கள் தான் முழு பிரயாண நாட்கள். ஆனால், போய்வர நான்கு வாரங்கள் செலவாகும் போல் தடல்புடல் ஏற்பாடுகள். 10 |
கொழும்பில் நாங்கள் வாழ்ந்தது முழுமையான ஓர் சிங்கள பகுதியிலே. கிராமம் என்றோ, நகரம் என்றோ எதிலும் அடக்க முடியாது, இடையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஓர் கிராமியநகரம். வீட்டிலும் பாடசாலை வகுப்பறையில் மாத்திரம்தான் தமிழ் என்னோடு வாழ்ந்தது. இடையில் எல்லாமே சிங்களம் தான். எவ்வளவு தூரம் தான் சுற்றி சுழன்று திரிந்தாலும், வாழ்க்கை, ஐந்து சதுர மைல்கள் சுற்றளவுக்குள் அடங்கிப்போய் கிடந்தது. 11 |
இக்கரை பச்சை எல்லாம் பார்த்து பார்த்து, அதன் பச்சையெல்லாம் மங்கிப்போய்விட்டன போலொரு தோற்றம். தொலைந்து போனாலும் பரவாயில்லை, தூரத்து பச்சைகளையும் ரசிக்கவேண்டும் என்ற அவாக்கள் நிரம்பத்தொடங்கிய வயது அது. இந்நிலையில், இதுவோர் இருநூற்று ஐம்பது மைல்கள் நெடுந்தூர புகையிரத பயணம் என்பது மாத்திரமின்றி, ஒரு முழுமையான தமிழ் பகுதிக்கு போகிறேன் என்ற இன்னுமோர் நிலைப்பாடும் பெரியதோர் விடயம். அன்றைய நிலையில் இலகுவில் கிடைப்பதொன்றில்லை. 12 |
யாழ்ப்பாணத்தை பற்றி அன்று எனக்கு அந்த வயதுக்கு அளவானதும் தேவையானதுமான தெளிவுகள் இருந்தன. என் அம்மாவும் அப்பாவும் மானிப்பாய், நவாலி ஊர்களைச்சேர்ந்தவர்கள் என அம்மா சொல்லக்கேட்டிருந்தேன். பனை மரங்கள் நிறைந்த காடு அது, அங்கே இடப்பெயர்களிலும் தமிழ், இடறி வீழ்ந்தாலும் தமிழ் என்று யாழ்பாணம் என்னுள் ஏற்கனவே பாசத்தை பெற்றிருந்தது. நடைதூரங்களில் கோயில்களும், அந்த கோயில்களின் மணியோசை யாழ்ப்பாண மண் எங்கும் கேட்டவண்ணமே இருக்கும் என்றும் பலர் சொல்லக்கேட்டு ஆசைப்பட்டிருக்கிறேன். 13 |
கொழும்பில் நாங்கள் வாழ்ந்த பகுதியிலிருந்து ஆறு அல்லது ஏழு மைகளுக்கப்பாலேயே கோயில்கள் இருந்தன. அவ்வளவு தூரம் போக சந்தர்ப்பங்கள் அமையாத நேரங்களிலெல்லாம், அம்மா எங்களை அருகிலிருக்கும் பௌத்த ஆலயங்களுக்கு அழைத்து செல்வார். ஆனால், அங்கே எல்லாமே சிங்களம் தான். ஆரம்பத்தில், ஆலய தரிசனத்துக்காக அங்கே பல தடவைகள் போய் வந்திருந்தோம். காலப்போக்கில், இரண்டு மணியோசைகளின் ஒலிகளும் ஒன்றாயினும், இரண்டு வழிபாடுகளும் வழிமுறைகளும் வெவ்வேறு என்று நன்றாகவே புரிந்ததும், போவதையே நிறுத்திக்கொண்டோம். 14 |
அப்பா என்னை பயணத்துக்குள் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்த நாளிலிருந்து, பயண நாள் வரை, வரையறை இன்றி கற்பனைகள். தூங்க முடியவில்லை. பிரயாண நினைவுகளால் அலைக்கழிக்கப்பட்டு கொண்டிருந்தேன். எப்படி இருக்கும் யாழ்ப்பாணம்? மக்கள் எப்படி இருப்பார்கள்? உணவு எப்படி இருக்கும்? ஆயிரம் கேள்விகள் எனக்குள்ளே. பள்ளி சகாக்களுக்கு சொல்லி மாளவில்லை. போகவே கிடைக்காதவர்கள் பொறாமைப்பட்டதை ரசித்தேன். வருடாந்தம் பொங்கல் விடுமுறைக்கு போய் வந்து கொண்டிருப்பவர்கள் “இது என்னடா பெரிய விஷயம்” என்றார்கள். இவர்களை ‘வந்து கவனித்துக்கொள்ளவேண்டும்’ என்று மனசுக்குள் பொருமிக்கொண்டேன். இருந்தாலும், என் நிலை உச்சத்தில் தான் பறந்து கொண்டிருந்தது. 15 |
அந்த பொன்னான வெள்ளி மாலை நேரமும் ஒரு நாள் வந்து சேர்ந்தது. அப்பாவும் அரை நாள் விடுமுறை எடுத்து விட்டு பகலே வீடு வந்து சேர்ந்தார். நானும் தயாராக இருந்தேன். அம்மாவுக்கு நிறைய முத்தங்கள் கொடுத்துவிட்டு, போய் வருகிறேன் என்றேன். அம்மாவை விட்டு என் வாழ்வில் முதல்முதலாக பிரிந்திருக்கப்போகும் தருணம். 16 |
வீட்டினுள்ளே, அம்மா எங்கு சென்றாலும் அவர் பின்னாலே தொடர்வதும், இல்லையேல், நான் போகும் இடமெல்லாம் அம்மாவை இழுத்துக்கொண்டு போவதுமான அந்த பயந்தாங்கொள்ளி வயதில், நான் அம்மாவை விட்டுப்பிரியும் சோகம் ஒரு புறம் வந்த வண்ணமே இருந்தது. இருப்பினும், பயண ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் அந்த சோகத்தை மிகச்சிறிதாய் சுரிக்கிவிட்டிருந்தன. 17 |
‘டைகர்’க்கு நாங்கள் எங்கேயோ போகிறோம் என்று புரிந்திருந்தது. வாலை ஆட்டியபடி என் கால்களுக்குள்ளேயே சுற்றி சுற்றி வந்துகொண்டிருந்தான். நாங்கள் பேரூந்து தரிப்பிடம் போகும் வரை பின்னாலே வந்தான். இது டைகர்’க்கு ஒன்றும் புதிதல்ல. பல தடவைகள் இதே மாதிரி செய்திருக்கின்றான். சில வேளைகளில், ‘அம்மா வீட்டில் தனியே இருக்கிறா. போங்கோ!’ என்றால், உடனே திரும்பி போய்விடுவான். எங்கள் வீட்டில் உள்ள ஒன்பது பேருடைய உடல்மொழிகளையும் கற்றவன் அவன். 18 |
இம்முறை நானும், அவன் எங்களுடன் பேரூந்து தரிப்பு வரை வரட்டும் என்று விட்டுவிட்டேன். பேரூந்துக்காக நின்றபொழுது வழக்கமாக அந்த இடத்தை சுற்றி சுற்றி முகர்ந்து பார்த்துக்கொண்டு திரியும் டைகர், இன்று என் காலடியிலேயே பின்கால்களில் அமர்ந்தபடி இருந்தான். ஓரிரு தடவைகள் என்னை தலையை தூக்கி பார்த்தான். பேரூந்து வந்துசேர்ந்த பொழுது அவனின் தலையை தட்டி “டைகர் போயிட்டு வாறன்” என்று நான் சொன்னதும், மெல்ல அணுங்கினான். 19 |
பேரூந்து புறப்பட்டு போனபின்பும், கொஞ்ச தூரம் பின்னால் ஓடி வந்து, பின் களைத்துப்போய், தன்னை விட்டு போகும் பேரூந்தை வெறித்து பார்த்தபடி நின்றான். பேரூந்து ஒரு திருப்பத்தில் திரும்பிய போது, கண்களிலிருந்து முழுமையாக அவன் மறைந்து போனான். அத்தருணம் என் நெஞ்சமும் கொஞ்சம் நொந்து தான் போனது. இன்று தான் முதன் முறை அவனை நான் பல நாட்கள் பார்க்காமல் இருக்கப்போகிறேன். ‘பல நல்ல நட்புகளை பிரயாணங்களால் பிரிய வேண்டிவரும்’ என்பதை, அன்று கொஞ்சம் உணர ஆரம்பித்தேன். 20 |
கொழும்பு கோட்டை புகையிரத பகுதிக்கு வந்த பொழுது, அந்தி வானம் தெரிந்தது. நான் இங்கு ஒரு சில தடவைகள் வந்து போயிருந்தாலும், இருளும் தருவாயில் வந்தது இது தான் முதல் தடவை. பழக்கடைகளும் உணவகங்களும் இன்னும் திறந்தே இருந்தன. அங்கே வரிசையாக இருந்த பல சைவ உணவகங்களில், பார்க்க மிகவும் துப்பரவானதாக இருந்த உணவகம் ஒன்றுக்கு அப்பா அழைத்துச்சென்றார். அங்கு இரவு சாப்பாட்டுக்காக இரண்டு சாப்பாடு பொட்டலங்களையும் வாங்கிக்கொண்டார். பொட்டலத்தில் இடியப்பமும் வடையும் சம்பலும் வாழையிலையில் வைத்து சுற்றிய பின், பழைய தினசரி பத்திரிகையில் கட்டித்தந்தது நினைவிருக்கிறது. 21 |
அன்றைய நாட்களில், சாம்பார், சொதி போன்ற திரவ உணவுகளை வெளியே எடுத்து செல்வதற்கு இன்று போல் நெகிழிப்பொதிகள் இல்லை. ஆதலால் அவை சாப்பாட்டு பொட்டலத்தோடு சேர்க்கப்படவில்லை. அந்த சாப்பாடு பொட்டலத்துக்குள், இரண்டு வடைகள் எனக்கும் இருக்கிறது என்ற நினைப்பு, என் வாயில் அப்பொழுதே உமிழ் ஊரத்தொடங்கிவிட்டன. புகையிரத நிலையம் உள்ளே போன பொழுது, என் கண்களையே எனக்கு நம்ப முடியவில்லை. இவ்வளவு மக்களுமா யாழ்ப்பாணம் போகிறார்கள்! 22 |
யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாக கொண்ட பெரும்பான்மையான தமிழ் மக்கள், கொழும்பில் வேலைக்காக ஞாயிறு மாலை வந்து, வாராந்தம் வெள்ளி யாழ்ப்பாணம் போவது வழக்கம். இது எனக்கு ஏற்கனவே தெரிந்த விடயமாக இருந்தாலும், இப்படி ஒரு நெரிசலை நான் எதிர்பார்க்கவில்லை. நிச்சயமாக முட்டி மோதி எங்கள் இருக்கைகளை பிடித்துக்கொள்ள வேண்டிவரும் என்று நினைத்துக்கொண்டேன். 23 |
இது என் வாழ்க்கையின் முதல் நீண்ட தூர பயணம் மாத்திரம் அல்ல, முதல் புகையிரத பயணமும் கூட. அத்தோடு, இது தான் எனது யாழ்ப்பாணத்தை நோக்கிய முதல் பயணம். ஏழரை அல்லது எட்டு மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலயத்துக்கு புகையிரதம் வந்து சேர்ந்த பொழுது, நாங்களும் எல்லோருடன் முண்டியடித்துக்கொண்டு ஏறினாலும், இறுதியில், உள்ளே போன போது, எங்கள் இருவருக்குமே ஜன்னல் ஒர இருக்கைகள், எதிரெதிரே அமரக்கூடியவாறு கிடைத்தது பெரியதோர் கொடுப்பனை. 24 |
நாங்களும் மூன்றாம் வகுப்பு பலகை இருக்கைகள் தான். இன்றைய நிலையில், பல மைல் தூரம் அதில் அமர்ந்து பயணிக்க முடியாது. முதுகுப்பகுதி நோக ஆரம்பிக்கும். ஆனால், அன்று இருநூற்று ஐம்பது மைல்கள் அப்படி பயணித்தது, ஒரு விந்தை. அன்றைய காலங்களில், அதில் பயணித்த எல்லா பிரயாணிகளுக்கும், அதுவோர் கின்னஸ் சாதனை. 25 |
எங்கள் இருக்கைகளை உறுதியாக்கிய பின், உள்ளே அமர்ந்தபடி, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் என்னதான் நடக்கிறது என்று ஒரு நோட்டம் விட்டேன். ஒலிப்பெருக்கியில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அது என்ன மொழி என்று அப்பாவிடம் கேட்டேன். அவர் அது தமிழ் என்று சொல்லி சிரித்தார். பேசுபவர் ஒரு சிங்களவர், தமிழில் அறையும் குறையுமாக தமிழ் ஊர் பெயர்களை உச்சரித்துக்கொண்டிருந்ததை, அப்பொழுது தான் நான் கூர்மையாக கவனித்தேன். அவர் பிரயாணிகளை மேலும் குழப்புகிறாரோ என்று நினைத்தேன். 26 |
மக்கள் அங்கும் இங்கும் ஓடியோடி தங்கள் ரயில் பெட்டிகளை தேடிக்கொண்டிருந்தார்கள். கண்டுபிடித்துவிடுவார்களோ அல்லது தவறவிட்டு விடுவார்களோ என்ற ஓர் பயம் எனக்கு வந்து போயிற்று. பயணம் அனுப்ப வந்தவர்கள் சிலர் அழுது வழியனுப்பினார். சிலர் சந்தோஷமாக, ‘அப்பாடா இப்போவாவது போகிறீர்களே’ என்று வெளியே சொல்லாமல் சொல்லி, சிரித்த முகத்தோடு வழியனுப்பினார்கள். 27 |
முதல் வந்து சேர்ந்த புகையிரத நிலையம் மருதானை. ஒவ்வொரு புகையிரத நிலயத்திலும் புகையிரதம் தரித்து நின்ற பொழுது துலாவித்துலாவி செய்தி சேகரித்தேன். புகையிரதம் புறப்பட்டு பல மணிநேரம் பயணிக்கும் வரை, அப்பா என்னை மலசலக்கூடத்துக்கு கூட போக விடவில்லை. இருக்கை பறி போய்விடும் என்ற பயம். பல புகையிரத நிலையங்களில் புகையிரதம் தரிக்கும் போதெல்லாம், இருக்கையில் இருந்தேயாகவேண்டும், என்பது அப்பாவின் அன்பான கட்டளை. 28 |
ஆங்காங்கே ஒரு சிலர் நின்றபடி பயணித்தனர். யாழ்ப்பாணம் வரையும் இவர்கள் நின்றுகொண்டே வரப்போகிறார்கள் என்று கொஞ்சம் கவலைப்பட்டேன். இனி வரப்போகும் நீண்ட இரவில், எப்பொழுதாவது, நான் என் இருக்கையை தாரைவார்த்துக்கொடுக்கவேண்டிவரும் அல்லது பறிகொடுக்கவேண்டிவரும் என்ற நினைவினால் நான் கொஞ்சம் சங்கடப்பட்டேன். பின் அவர்கள் சிறு தூரம் பயணிப்பவர் என்று அவர்கள் பல புகையிரத நிலையங்களில் இறங்கி போன பொழுது சமாதானம் அடைந்தேன். 29 |
நாங்கள் பயணித்த புகையிரத சேவையை ‘மெயில் ட்ரெயின்’ என்று சொல்வார்கள். அது இலங்கையின் தென்புறத்து தபால்களை வடக்குக்கும், வடக்கிலிருந்து தபால்களை தெற்கிற்கும் எடுத்ததுச்செல்லும் ஒரு ரயில்பெட்டியையும் தன்னோடு இணைத்துக்கொண்ட சேவை. நாங்கள் கொழும்பிலிருந்து இந்த ‘மெயில் ட்ரெயினில்’ புறப்பட்டது போல், காங்கேசன்துறையிலிருந்து இன்னும் ஒரு ‘மெயில் ட்ரெயின்’ வடக்கு தபால் பொதிகளை சுமந்த ரயில்பெட்டியுடன் கொழும்பு நோக்கி புறப்பட்டிருந்தது. 30 |
புகையிரத்துக்குள்ளே எல்லோரும் தமிழர்கள். சத்தமாக பேசிக்கொண்டு வந்தார்கள். இன்று போல் கையடக்க தொலைபேசிகள் இல்லாத காலம். அவரவர் தங்கள் தங்கள் போலி உலகத்துக்குள் பயணித்துக்கொள்ள முடியாத அழகான தருணங்கள் அவை. முன்னே அமர்ந்திருக்கும் முன்பின் தெரியாதவர்களுடன் பல காலம் பழகியது போல் பேச்சுக்கள். முதலில் “தம்பி எந்த ஊர்” என்று ஆரம்பித்த பேச்சுக்கள், பின் சிறித்து பேசுமளவுக்கு வளர்ந்திருந்தது. அப்பாவும் பல பேருடன் பேசிக்கொண்டு வந்தார். என்னையையும் ஒரு சிலருக்கு அறிமுகம் செய்ய, அவர்களும் என்னைப்பார்த்து புன்முறுவல் பூத்தது நன்றாக இருந்தது. நானும் பிரபல்யமாகிக்கொண்டு வருகிறேன் என்று தோன்றியது. 31 |
அங்கே ஒரு மூலையில் இருந்த அக்கா ஒருவரும், இங்கே என் அருகிலிருந்த அண்ணா ஒருவரும் கட்டுப்பாடில்லாமல் கண்களால் காதல் கதை பேசிக்கொண்டிருந்தார்கள். அப்பாவும் இதை பல தடவை கவனித்து விட்டு என்னைப்பார்த்து புன்னகைத்தார். அந்த புன்னகை ‘பாத்தீங்களோ. இது தான் லவுசு.’ என்று சொல்வது போல் இருந்தது. எனக்கு அப்போ வெறும் பனிரெண்டு வயது தான் ஆகியிருந்தாலும், எனக்கும் இந்த கண்டறியாத காதலை பற்றியும் கொஞ்சம் தெரியும். இருவரும் யாழ்ப்பாணத்தில் தான் இறங்கினார்கள். அண்ணா இறங்கும் போது அக்காவை அளவுக்கதிகமாகவே பார்த்து நெளிகிறாரோ என்று தோன்றியது. இவர்கள் காதல், கல்யாணம் வரை போனதோ, அல்லது இன்னுமொரு தொலைந்து போன‘ ரயில் சிநேகமோ’ என்று இன்று வரை என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை. 32 |
புகையிரதத்தின் தலையிலிருந்து வால்வரை நடந்து பார்க்க ஆசை. ஆனால், அப்பா சொன்ன காரணங்கள் என்னை இருக்கையிலேயே இருத்திவைத்து விட்டன. மலசலக்கூடம் போகக்கிடைத்த நேரமெல்லாம், இரு பக்கமும் கதவுகள் திறந்தபடி இருந்த வாசல்களை பார்த்து பயத்துடன் ரசித்தேன். அதில் எந்த வித பயமுமின்றி, சிலர் கைகளை எதிலும் பிடிக்காமல் நின்றது, எனக்கு ஒரு விந்தையாய் தான் இருந்தது. நானும் அதில் நின்று வெளியே பார்க்க வேண்டும் என்ற நிறைவேற்ற முடியாத ஆசையும், என்னுள் வந்து போயின. இரண்டு பெட்டிகள் இணையும் இடங்களில் நடக்கும் போது, நான் தூக்கி வீசப்பட்டு விடுவேன் என்கின்ற நிலை இருந்தாலும், அதையும் வேண்டுமென்றே பல தடவை கடந்து பார்த்து, என் பயத்தையும் பலத்தையும் கணக்கிட்டுக்கொண்டேன். 33 |
மலசலக்கூடங்கள் சொல்லி பெருமைப்படும் அளவுக்கு சுகாதாரமாக இருக்கவில்லை. இன்றையது போல மலசல இருக்கைகள் இல்லாத மலசக்கூடங்கள் அப்போ. தரையோடு குந்தியிருந்து தான் கடன்களை கழிக்க வேண்டும். எங்கும் சிதறி இருந்த கழிவுகள் துர்நாற்றதை அந்த மலசல கூடத்தை கடக்கும் போதெல்லாம் கொணர்ந்தது. மலசலக்கூடங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதும், பிரயாணிகளுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கப்படவேண்டும் என்ற சிந்தனைகளும் இல்லாத நிர்வாகங்கள் இருந்த காலமது. பல தடவைகள் கட்டாயம் மலசலக்கூடம் போகவேண்டி வந்தபோதும் கூட, அதை பலவந்தமாக கடத்தப்பார்த்தேன். 34 |
பல தடவைகள், ஜன்னலுக்கு பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த சங்கிலியை பார்த்தபடி நான் நின்றதை கண்ட அப்பா சொன்னார். “அது அவசர சங்கிலி. அவசர தேவைக்காக புகையிரதத்தை நிறுத்த வேண்டிய சந்தர்ப்பம் வரும்பொலுதெல்லாம் அதை இழுத்தால், வண்டி நின்று விடும்” என்று சொல்லிவிட்டு, “விளையாட்டுக்குக்கூட அதை இழுத்து விடவேண்டாம்” என்றும் அறிவுரையும் சொன்னார். எவை அவசர தேவைகள் என்று நானும் அப்பாவை கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. 35 |
பயணம் நடுராத்திரியை அண்மிக்கும் நேரத்தில், சக பிரயாணிகளின் பேச்சும் சத்தங்களும் அடங்கிப்போயின. யன்னல்கள் அகலமாகத்திறந்திருக்க, அதனூடு உள்ளே வரும் புகை கலந்த காற்றும் ருசிக்கத்தக்கவைகளாகத்தான் இருந்தது. வானத்தில் பௌர்ணமி சந்திரன் அழகாகத்தான் இருந்தான். அவனும் துணைக்கு என்னோடு யாழ்ப்பாணம் நோக்கி இலவசமாக பயணித்துக்கொண்டிருந்தது எனக்கு ஒரு மகிழ்ச்சி. அவனுடன் மௌனமாக பேசிக்கொண்டு வந்தேன். அப்பப்போ அந்த அழகிய முழுநிலவை கருமேகங்கள் விழுங்கி விடுவதைப்பார்த்து, மேகங்கள் மீது கோபப்பட்டேன். முழு நிலவின் பார்வை பூமியின் மேனியில் படாது போனபோதெல்லாம், வெளிப்புறம் கடும் இருளானது. புகையிரதத்தினுல் பாதுகாப்பாக இருந்ததினால் இந்த வெளிப்புறத்தே ஓடும் கடும் இருளை பயமின்றி ரசித்தேன். 36 |
சில காட்டுப்பகுதியில் சிவப்பு சமிக்ஞை காரணமாக புகையிரதம் தரித்து நிற்கும் போதெல்லாம், யன்னலினூடு வெளியே தெரிந்த அசையாது நின்ற இருள் பயமுறித்தன. அத்தருணங்களில் மெதுவாக கண்களை மூடி சாய்ந்து படுத்துக்கொண்டேன். வெளியே பார்த்து ரசிக்க பெரும்பாலும் கும்மிருட்டுக்கள் தான் மிஞ்சி இருந்தாலும், அப்பப்போ, இதோ அனைந்துவிடப்போகிறேன் என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டிருக்கின்ற மங்கிய தெரு விளக்குகளில், பாதைகள் தெரிவதும் அழகாகத்தான் இருந்தது. இரவின் கருமையை கிழித்தபடி வாகனங்களின் முன் இரு விளக்குகளும் முன்னோக்கி போவது ஏனோ பார்க்க ஆசையாகத்தான் இருந்தது. இரவின் நிசப்தத்தில் புகையிரதம் திடீரென்று நிறுத்தப்படும் போது, கரல் கட்டிப்போன இயந்திரங்கள் ஒன்றோடொன்று உரசும் ஒலிகள் காலடியின் கீழிருந்து கேட்கும். அவை இரு மிருகங்கள் ஒன்றையொன்று பார்த்து உருமுகின்ற ஒலி போலிருப்பது ரசிக்கக்கூடியவைகளாகத்தான் இருந்தன. 37 |
இப்பொழுது போல் தண்ணீர் அப்பொழுதெல்லாம் கடைகளில் வாங்க முடியாது. நெகிழிப்போத்தல் என்பதே இல்லாத காலம். அப்பா ஒரு கண்ணாடி போத்தலில் தண்ணீர் கொண்டுவந்திருந்தார். அது இரண்டு பேருக்குமே நான்கைந்து வாய் அளவுக்கு தான் இருந்தது. இரவு சாப்பாடு முடிந்த நிலையில், மிஞ்சியிருந்த தண்ணீரை இருவரும் குடித்துவிட்டு கைகளை பேப்பரில் துடைத்துக்கொண்டோம். இன்னும் முழு இரவுக்கும் குடிக்க தண்ணீர் தேவையென்று அப்பா, தண்ணீரை எங்கெங்கேயோ ரயிலுக்குள் நடந்து தேடிப்பார்த்தார். தண்ணீர் கிடைக்கவில்லை. ஒரு ஆள் அரவமில்லாத சிங்களப்பகுதி புகையிரத நிலையமொன்றில் ஒரு சில நிமிடம் புகையிரதம் தரித்து நின்ற பொழுது, தண்ணீர் எடுத்துவருகிறேன் என்று அப்பா சொல்லிவிட்டு போய் திரும்பி வரும் வரை, நெஞ்சம் பதைபதைத்தபடி இருந்தேன். 38 |
புகையிரதம் புறப்படும் முன் அப்பாவும் வந்துசேரவேண்டும். யாரும் அப்பாவின் இருக்கையை சொந்தம் கொண்டாட வந்துவிடவும் கூடாது. புகையிரதம் மெல்ல நகர்ந்தபோது கூட, அப்பா வரவில்லை என்று நானும் எழுந்து தேடிப்பார்க்க எத்தனிக்கவில்லை. பயந்தபடி இருந்த எனக்கு அப்பா முகம் கண்டதும் உடலும் மனதும் இலகுவாகிப்போனது. ஓடும் ரயிலில் ஏறியதாக, மறு நாள் காலை தான் அப்பா சொன்னார். ஏற்கனவே என்னுள் ஹீரோவாக இருந்த அப்பா, அன்று எனக்கு சூப்பர் ஹீரோவாக தோன்றினார். தண்ணீரும் கிடைத்தது. மீண்டும் தண்ணீர் தேவைப்பட்டபோது நாங்கள் அனுராதபுரத்தை வந்தடைந்திருந்தோம். 39 |
அப்பா, இருந்த நிலையிலேயே சாய்ந்தபடி படுத்திருந்தார். தலை அங்கும் இங்கும் எவ்வளவுதான் ஆடினாலும் எழுந்திருக்கவில்லை. அனுராதபுரம் வந்தடைந்த பொழுது நித்திரை விட்டெழுந்த அப்பா, அரைவாசித்தூரம் வந்து விட்டோம் என்றார். அப்போ நேரம் நடுச்சாமம் பன்னிரெண்டை தாண்டி விட்டிருந்தது. புகையிரதம், பல நிமிடங்கள் அனுராதபுரத்தில் தரித்து நின்றது. இங்கு பலர் இறங்கிப்போய் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அப்பாவும் போய் புகையிரதம் புறப்படுவதற்கு பல நிமிடங்களுக்கு முன்பே வந்துவிட்டார். புகையிரம் பல நிமிடங்கள் இங்கே நிற்பதற்கு அப்பாவிடம் காரணம் கேட்ட பொழுது, பெரியதோர் விளக்கமே தந்தார். அனுராதபுரம் கடந்த பின் காங்கேசன்துறை வரை ஒரே ஒரு தண்டவாளம் தான். இந்த ஒன்றை தான் இருவழி போக்குவரத்துக்கும் பாவிக்கிறார்கள். நாங்கள் பல நிமிடங்கள் தரித்த நின்றது யாழிலிருந்து புறப்பட்ட புகையிரம் அனுராதபுரம் வந்து சேரும் வரை. அனுராதபுரம் கடந்த பின் மதவாச்சி வரும் என்றும், பிறகு எல்லாமே தமிழ் பிரதேசம் தான் என்றும், மேலும் அப்பா விளக்கம் தந்தார். 40 |
எனக்கு இருப்பு கொள்ளவில்லை. தமிழ் புகையிரத நிலையங்களை பார்க்க ஆயத்தமாகினேன். முதல் தமிழ் நகரமான வவுனியா இரண்டு மணி கடந்த பின் வந்து சேர்ந்தது. அந்த பெயரை கேட்கவே கொஞ்சம் இதமாக இருந்தது. கொழும்பிலிருந்து மதவாச்சி வரை சிங்களம் தான் பெயர் பலகைகளில் முதலிடத்தில் இருந்தது. வவுனியாவில் இது மாறி, தமிழில் முதலிடத்திலும், சிங்களம் இரண்டாவதுமாக இருந்தது, நாங்கள் நிச்சயமாக தமிழ் பிரதேசத்துக்குள்ளே வந்து விட்டதை நிரூபித்தது. ஆனால், இலங்கை எங்கும் இன்று சிங்களத்தில்தான் முதலில் பெயர்கள் எழுதப்படுகின்றன. வவுனியா தாண்டிய பின்பு, ஒவ்வொரு புகையிரத நிலைய பெயர்களையும் மனப்பாடம் பண்ணிக்கொண்டே வந்தேன். இன்று யாழ் பயணிக்கும் போதெல்லாம், அன்று மனப்பாடம் பண்ணிய புகையிரத நிலைய பெயர்கள் நினைவில் வருகிறது. 41 |
இரவும் நிலவும் மெல்லிய குளிர் காற்றும் அந்த ரயிலின் இடைவிடாத தாலாட்டு சத்தங்களும் கூட்டுச்சேர்ந்து, என்னை தூங்க வைக்க பல தடவைகள் போராடின. ஆனால், கண்களை கசக்கிக்கசக்கி அவைகளை தோற்றுபோக வைத்துவிட்டேன். எந்த நல்ல அனுபவங்களையாவது தவறவிட்டுவிடுவேன் என்கின்ற எண்ணத்தில், முழு இரவும், விழித்தபடி என் பயணத்தைக்களித்தேன். அப்பா, காலை நான்கு மணி போல் எழுந்து, “படுத்தீரோ” என்று கேட்டதை, “ஓமோம் கொஞ்சம்” என்று பொய் சொல்லி கடத்திவிட்டேன். 42 |
நடு இரவுகளில், புகையிரதம் காட்டுப்பகுதிகளில் நிறுத்தப்படுவற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது. அப்பா, அதை எனக்கு முதல் சொல்லவில்லை. முழு பிரயாணமும் முடிந்து வீடு வந்து சேர்ந்தபொழுது, பேச்சுவாக்கில் அது எனக்கு தெரிய வந்தது. அக்காலங்களில், இரவு புகையிரதங்களை எங்காவது வலுக்கட்டாயமாக சிங்கள காட்டுப்பகுதிகளில் நிறுத்தி, அதில் பயணிக்கும் தமிழ் பயணிகளின் உடமைகளை பறிப்பது, சிங்கள பகுதிகளில் வாழ்ந்த காடையர்கள் செய்கின்ற வழக்கமான செயலாக இருந்தது. நிர்வாகமும் அதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. இது பல பத்தாண்டுகள் நடந்தேறிய நாடகம். இதனால், பெறுமதியான பணம், நகைகளை இழந்த தமிழர்கள் அதிகம். 43 |
இன்று போல் அன்று வங்கி சேவைகளும் இருக்கவில்லை. பலருக்கு மாதச்சம்பளம் பணமாகத்தான் கொடுப்பார்கள். அதை இவர்களிடம் இழந்தோர் பலர். ஒரு சில கொலைகளும், பல பெண்கள் வெளியே சொல்லமுடியாத அளவுக்கு மானபங்கப்படுத்தப்பட்ட செயல்களும் நடந்தேறின. இது எனக்கு அன்று தெரிந்திருந்தால் நான் என் பயணம் முழுதும் நடுங்கியபடியே பயணித்திருப்பேன். இவை எல்லாம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்த போது, நான் கொழும்பில் ஒரு சில சிங்கள இனவெறியர்களிடம் படும் அவஸ்தை, சிங்கள பிரதேசங்களில் வாழும் ஒட்டு மொத்த தமிழருக்கும் ஏதோ ஒரு வகையில் நடந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன். 44 |
யாழ்ப்பாணம் வந்து சேர்ந்த பொழுது காலை ஐந்து மணி இருக்கும். இருள் இன்னும் சூழ்ந்திருந்தது. யாழ்ப்பாண புகையிரத நிலயத்தைப்பார்க்க எனக்கு பெரிதாக இருந்தது. இவ்வளவு பெரிய புகையிரத நிலையமா. நான் சின்னதாக ஒரு நிலையத்தை எனது மனதில் பதித்து வைத்திருந்தது எனக்கு கொஞ்சம் குற்ற உணர்வை தந்தது. பயணிகளில் பெரும் பகுதியினர், யாழ்ப்பாணத்தில் எங்களுடன் இறங்கிவிட்டார்கள். புகையிரதம், காங்கேசன்துறை நோக்கி ஏறக்குறைய வெறுமையாகத்தான் போனது. 45 |
புகையிரத நிலையத்திலிருந்து வெளியே வந்தபொழுது, புழுதி மண் வாசனை மெல்ல மூக்கினுள் பதியத்தொடங்கின. எங்களுக்கு முன்பே வெளியேறிய பயணிகளில் பலர், தங்கள் ஓரிரு வாகனங்களால் புழுதியை கிளப்பிவிட்டிருந்தார்கள். அதுவோர் கோடை மாதம் என்பதும் இன்னுமொரு காரணம். நிச்சயமாக கொழும்பு சகதி மண்ணின் புழுதி வாசனையும், யாழ்ப்பாணத்து செம்மண் புழுதி வாசனையும், வேறாகத்தான் எனக்கு பட்டது. இரு மண்ணிலும் புதையும் மரம், செடி, கொடிகள் வேறு. அதனால் மண் வேறு. அதனால் வாசனைகளும் வேறு. யாழ்ப்பாணத்திற்கு பல வருடங்கள் கழித்து இப்போதெல்லாம் நான் போகும் போதெல்லாம், அன்றைய அந்த மண் வாசனையை இன்றும் உணர்கிறேன். 46 |
அதிகளவினிலான மனித நடமாட்டம், அந்த அதிகாலையில், அப்பகுதியில் படுத்திருந்த நாய்களின் நீண்ட இரவு நித்திரையை குழப்பிவிட்டிருந்தன. அந்த நாய்கள் எல்லோரையும் பார்த்து குரைத்துக்கொண்டே இருந்தன. 47 |
அதில் ஒரு வயதான நாய், ‘இந்த மனுஷங்களோட ஒவ்வொரு நாளும் இதே பிரச்சனையாய் போயிட்டுது. ஒழுங்கா படுக்கவும் விடாங்கள். எங்கிருந்து தான் இந்த விடிய காலம்பற இங்க வந்து சேருறாங்களோ தெரியவில்ல,’ என்று குரைத்தது. 48 |
இதை கேட்ட இன்னுமொரு நாயும் தன் தலையை ஆட்டிவிட்டு முதல் நாய் குரைத்ததையே எழுத்துப்பிழையில்லாமல் திருப்பிக்குரைத்தது. 49 |
இதை கேட்டுக்கொண்டிருந்த மூன்றாவது நாயும் மற்றைய நாய்கள் குரைத்ததையே குரைக்க முனையும் பொழுது, அங்கோர் மூலையில் சிவனே என்று படுத்திருந்த வயதான பாட்டி நாயொன்று, தலையை தூக்கி ‘ஏன்டா விடியகாலம்பற இப்பிடி நாய் மாதிரி குரைக்கிறீங்கள். படுக்க விடுங்கடா,’ என்று அதுவும் குரைத்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டது. 50 |
அப்பா, இவைகளின் குரைப்புகளை பார்த்து “நல்ல வரவேற்பு” என்று சொல்லி சிரித்தார். எங்களை அமைதியாக வழியனுப்பிய டைகரை அன்போடு நினைவு கூர்ந்தேன். அவன் என்னை இன்றில்லாவிட்டாலும் நாளை நிச்சயம் தேடுவான் என்ற எண்ணம் கொஞ்சம் கவலையை தந்தது. வழியெங்கும் ஆங்காங்கே நாய்கள் குடும்பமாக குழுமியிருந்தன. ஒரு நாய் காலை கடன்களை முடித்துக்கொண்டிருந்தது. சில நாய்கள் இரவுக்கடன்களையும் இன்னும் செய்துகொண்டிருந்தன. நடுபாதையே அவர்களின் படுக்கை அறை. போகிற மிதிவண்டிகள் அவர்களை சீண்டாமல் தள்ளியே போயின. இது ஒன்றும் பார்ப்பதற்கு புதிதல்ல. கொழும்பு நாய்களும் நீங்களும் ஒன்றுதான் என்று நினைத்துக்கொண்டேன். டைகர், இவைகளைப்போன்ற நாய்களுடன் சேர்ந்து எங்கும் நிற்காமல், வீடு போய் சேர்ந்திருப்பான் என்று நினைத்துக்கொண்டேன். 51 |
கேள்விப்பட்டதை போலவே, கோவில் மணிகளின் ஓசையும் கேட்டபடி தான் இருந்தன. நான், நல்லூர் கோவில் மணியோ என்று அப்பாவிடம் கேட்டேன். இருக்கலாம் என்றார் அப்பா. அப்பா, உடனடியாக என் பதிலை நிராகரிக்காமல் சரியென்று ஆமோதித்தது, எனக்கும் யாழ்ப்பாணத்தை பற்றி தெரியும் என்று அப்பாவுக்கே கொஞ்சம் மவுசு காட்டிய சந்தோசம். நல்லூர் கோவிலைப்பற்றி, யாழ்ப்பாணத்திலிருந்து வந்து போனவர் பலர் எனக்கு சொல்லக்கேட்டிருக்கிறேன். அது யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தான் இருக்கிறது என்றும், யாழ்ப்பாண தமிழர்களுக்கு இது ஓர் பெரிய கோவில் என்றும் தெரிந்திருந்தது. இன்று கூகுல் வரைபடத்தில் தூரம் அளந்த போது, அந்த மணிச்சத்தம் நல்லூர் கோவில் மணிச்சத்தமாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது. 52 |
அப்போ முச்சக்கர உந்துருளிகளும் இல்லாத காலம். எமது சூட்கேசுக்கும் இன்று இருப்பது போல் உருட்டிச்செல்ல சக்கரம் எதுவும் அன்று இருக்கவில்லை. அப்பா, பெரிய சூட்கேஸை சிலவேளைகளில் அதன் கைப்பிடியை பிடித்து தூக்கியபடியும், சிலவேளைகளில் தலையில் தூக்கியபடியும், நானும் சின்னதாக ஒன்றை தூக்கியபடியும், ஸ்டேஷன் வீதியில் இருக்கும் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திலிருந்து நடக்க ஆரம்பித்தோம். ஸ்டேஷன் வீதி சந்தியில் வந்து, வலம் திரும்பி, ஆஸ்பத்திரி வீதி வழியே யாழ்ப்பாணம் பேரூந்து தரிப்பிடம் வரை நடந்து செல்ல ஆரம்பித்தோம். நான் முன்னே நடக்கும் அப்பாவை பின் தொடர்ந்தபடி, இந்த காலையிலேயே, மிதிவண்டிகளில் எங்கேயோ போகின்ற பலரையும் பராக்கு பார்த்தபடி, பின்தொடர்ந்தேன். இன்று போல் அன்று உந்துருளிகளும் பெரிதாக எதுவும் இல்லை. எல்லோருமே மிதிவண்டி தான். இவர்கள் எல்லோருமே தமிழர்கள் என்ற எண்ணம் தோன்றிய போது, கொஞ்சம் மனசு சிரித்துக்கொண்டது. 53 |
கொழும்பில், வீட்டில் இருந்து வெளியில் வந்தால், சந்திக்கும் ஏறக்குறைய எல்லோருமே சிங்களவர்கள். ஒரு சில சிங்களம் பேசும் இளம் இனவெறிக்கூட்டம் ஆங்காங்கே சுற்றிக்கொண்டு திரியும். இவர்கள் கண்ணில் பட்டாலே கொஞ்சம் மனசு படபடக்க ஆரம்பிக்கும். அடிப்பார்களோ, துப்புவார்களோ அல்லது “சக்கிலி தெமலா”, “நாய் தெமலா” என்று பட்டம் வைத்து அழைப்பார்களோ. இந்த அதிகாலையில் பார்த்த அந்த கொஞ்ச மக்களுமே மனசை தொட்டுவிட்டார்கள். அத்தனையும் தமிழர்கள். யாரும் காரித்துப்பமாட்டார்கள், அடிக்கமாட்டார்கள், பட்டங்கள் சூட்டி சிறுமைப்படுத்தவும் போவதில்லை. கோடை ஆனாலும், மெல்லிய இதமான குளிர் காற்றும், அந்த பயமற்ற சுதந்திரமான மனநிலையும், இதமாகத்தான் இருந்தது. 54 |
அதிகளவில் இன்று போல் கடைகள் ஆஸ்பத்திரி வீதியில் அன்று இல்லாது விட்டாலும், இருந்த ஒருசில பலசரக்கு கடைகளும் பார்க்க அழகாகத்தான் இருந்தது. ஓலையினால் வேயப்பட்ட கூரையோடு ஒரு பெட்டிக்கடை மூடப்பட்டிருந்தது. அதற்கு வெளியே ஒரு நீண்ட வாங்கில் ஒரு பெரியவர் படுத்திருந்தார். அவருக்கு அருகே ஒரு நாயும் கீழே படுத்திருந்தது. கொழும்பு பெட்டிக்கடைகளும் இது போல் தான். ஆனால், இது தமிழ் பெட்டிக்கடை என்ற எண்ணம், என்னை பல முறை அதை திரும்பி பார்க்க வைத்தன. 55 |
யாழ்ப்பாணம் சந்தை பகுதியை அடைந்த நேரம் வெளிச்சம் மெல்ல பரவியிருந்தது. ஒரு உணவகத்தின் சாளரங்களை மெல்ல ஒவ்வொன்றாய் திறந்து கொண்டிருந்த ஊழியர் மெல்ல பார்த்து சிரித்தார். வாசலுக்கு தண்ணீர் தெளித்துக்கொண்டிருந்த இன்னுமொரு ஊழியர் நாங்கள் கேட்காமலே “சாப்பாடு இருக்கு” என்றார். அவர் பேச்சின் அசைவிலே யாழ்ப்பாண தமிழ் வாசனை தெரிந்தது. எனக்கு நல்ல பசி. அப்பாவை கேட்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. நான் உள்ளே போன அப்பாவை பின் தொடர்ந்தேன். என்ன சாப்பிட்டோம் என்று நினைவில்லை. கடைசியில் அருந்திய அந்த கோப்பியின் ருசி இன்னும் என்னிலிருந்து அகலவில்லை. “பனஞ்சீனி கலந்த கோப்பி” என்று அப்பா சொன்னார். நாக்கில் பட்ட அந்த சுவை இன்று நாற்பத்து ஐந்து வருடங்கள் கடந்த பின்னும் கூட, என்னை விட்டு அகலவில்லை. இப்போதெல்லாம் நான் தேனீர் அருந்தும் போதெல்லாம் பனஞ்சீனி கலந்து தான் குடிக்கிறேன். 56 |
உணவகத்திலிருந்து வெளியே வந்த பொழுது யாழ்ப்பாணம் முழுமையாக வெளிச்சத்துக்கு வந்துவிட்டிருந்தது. தமிழ் பெயர் பலகையுடன் பல கடைகள். பாதையின் நடுவில் ஒளவையார் சிலை. எதிலும் சிங்களம் இல்லை. சன நடமாட்டமும் கொஞ்சம் அதிகரித்திருந்தது போல் இருந்தது. இதுதான் யாழ்ப்பாணம். இதுதான் தமிழ் மண். இவர்கள் எல்லோருமே தமிழர்கள், என்கின்ற எண்ணங்கள் என் அடி வயிற்றிற்குள் ஆனந்தத்தை நிரப்ப ஆரம்பித்தன. சுற்றி சுற்றிப்பார்த்தேன். முன்னே நடந்தபடி பின்னால் திரும்பி திரும்பி பார்த்தேன், எதையும் தவற விட்டு விட கூடாதென்று. 57 |
மானிப்பாய் ஊடாக காரைநகர் போகும் பேரூந்து தரிப்பிடத்தை தேடி பஸ்ஸை பிடித்துக்கொண்டோம். “பேரூந்து மானிப்பாய் போகுமா?” என்று ஓட்டுநரிடம் அப்பா தமிழில் விசாரித்ததையும் நடத்துநரிடம் தமிழில் கேட்டு பயணச்சீட்டை வாங்கியதையும் ஆச்சரியத்தோடு ரசித்தேன். அடி மனதில் எழுந்த மகிழ்ச்சி பலமாக சிரிக்கத்தூண்டியது. அடக்கிக்கொண்டேன். 58 |
அந்த அதிகாலையிலும் பேரூந்து நிரம்பிய தமிழர்கள். பலர் புகையிரதத்தில் எம்மோடு பயணித்தவர்கள். எல்லோரும் சத்தமாக தமிழில் பேசிக்கொண்டு வருவது பார்க்க இதமாகத்தான் இருந்தது. பேரூந்து போன பாதை எல்லாம் எதையும் தொலைத்துவிடக்கூடாது என்று, யன்னலினூடே காட்சிகளை பொறுக்கிக்கொண்டே பயணித்தேன். எங்கும் கிடுகு வேலிகள், பனை மரங்கள், வீட்டுக்கு வீடு வேப்பைகள். வீட்டு வாசலில் நின்று பேசியபடி தமிழர்கள், அதிகரித்து காணப்பட்ட மிதிவண்டி ஓட்டும் பெண்கள். கொழும்பை போலல்லாது, இங்கு பெண்கள் அதிகளவில் மிதிவண்டி ஓட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். வீதிக்கே தெரிவது போல் கிணறுகள். அங்கே சிலர் குளித்துக்கொண்டும் இருந்தார்கள். பெண்கள் உள்பட. சின்னசின்னதாக மரநிழலில் பல கடவுள்கள். பெரிதாக சில கோயில்கள். ஒரு திரையரங்கொன்றில் பழைய படம் சிவாஜி கணேசனின் ‘மரகதம்’ ஓடிக்கொண்டிருந்தது. கொழும்பை போலல்லாது, பௌத்த மதத்தின் அடையாளங்கள் எதுவும் இல்லாத சாலையோரங்கள். நிச்சயமாக தென்றலும் சூரியனும் வித்தியாசமாகத்தான் பட்டது. எல்லாமே ஒரு புதிய உலகுக்குள் நான் புகுந்துவிட்டதை உணர்த்தியது. 59 |
மானிப்பாயில் இருந்த அம்மாவின் உறவினரின் வீடு வந்து சேர்ந்த போது, எங்கள் கொழும்பு உறவினர்கள் பலர் ஏற்கனவே கொழும்பிலிருந்து வந்து சேர்ந்தாகி விட்டனர். எனக்கு நிறையவே வரவேற்பு இருந்தது, அம்மாவின் கடைசி செல்லப்பிள்ளை என்பதால். 60 |
ஆனால், கரகரத்த குரலாக மாறிவரும் என் குரலை கேட்டு எல்லோரும் சிரித்தது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. வழக்கம் போல் எல்லோரையும் தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற அந்த வயதின் சிறுபிள்ளைத்தனமான கோபங்கள் வந்து, வந்த வேகத்திலேயே மறைந்தும் போயின. அன்று இரவு வரை என்னிடம் ஆயிரம் கேள்விகள். என்னை கிண்டல் பண்ணி கோபப்படுத்தும் மாமியார் இருவரின் தொல்லைகள் ஒருபுறமும், பாட்டிமார்களின் அடுக்கு கேள்விகள் மறுபுறமும் ‘ஏன்டா இந்த பூமிக்குள் வந்து வீழ்ந்து விட்டோம்’ என்றாகிவிட்டது. நானும் நான்கு கேள்விகளுக்கு முன்னுக்குப்பின்னான ஒரு பதில் வீதம், பதில்களை சொல்லி தப்பித்துக்கொண்டேன். சில வேளைகளில், தாங்கள் சிரிப்பதற்காகவே, என் கரகரத்த குரலில் பதில்களை வாங்க வேண்டும் என்று இவர்கள் தாறுமாறாக கேள்விகள் கேட்கிறார்களோ என்று கூட நினைத்தேன்.‘ 61 |
இவர் சரியா வெட்கப்படுறார்’ என்று வேறு எங்கேயோ இருந்து ஒரு ஆண் அசரீரியின் குரல் கேட்டது. நான் அது யார் என்று பார்க்கவில்லை. பார்த்தல் அவரையும் தீர்த்துக்கட்ட வேண்டி வந்துவிடும். ஒரு வகையாக அந்த இரவு அவர்களுக்கு என்னை வைத்தே இனிதாகப்போயிற்று. சிந்தித்துப்பார்த்ததில், இவர்கள் என்மீது செலுத்திய ஆளுமை எனக்கு கொஞ்சம் விரும்பத்தக்கதாகவும் இருந்தது. இவர்களுக்கும் நான் செல்லப்பிள்ளையோ என்று சந்தோஷப்பட்டது மனசு. அன்றைய நடு இரவு வரை அப்பாவும் மற்றையவர்களும் கல்யாண ஆயத்தங்களில் இருக்க, நானோ படுத்திருந்தபடி, நாளை எப்படி யாழ்ப்பாணத்தில் வெகு தூரம் சுற்றலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்தேன். 62 |
அடுத்த நாள் ஞாயிற்று கிழமை. திருமண நாள். பிற்பகல் திருமணம் முடிந்த கையோடு, நானும் என் வயதை ஒத்த எனது இரு ஒன்று விட்ட மாமனார்களும் முதல் தடவையாக மானிப்பாயை இரண்டு மிதிவண்டியில் சுற்றினோம். எங்கிருந்து அந்த மிதிவண்டிகள் எங்களுக்கு வந்து சேர்ந்தது என்று தெரியாது. மானிப்பாய் போலீஸ் நிலையம் தாண்டி வந்த முச்சந்தியில் நின்றபடி, எந்தப்பக்கம் போகலாம் என்று ஒருசில வினாடிகள் நின்று நட்புடன் வாக்குவாதப்பட்டுவிட்டு பின், வலப்புறம் திரும்பி, அது எங்கே போகிறது என்று தெரியாமல் போக ஆரம்பித்தோம். அந்தப்பாதை நாங்கள் புகையிரதத்தில் கடந்து வந்த சாவகச்சேரி பக்கம் தான் போய்ச்சேரும் என்று அப்போ எனக்கு தெரியாது. பல மைல்கள் ஓடி, உடல் களைத்துப்போய் ஓரிடத்தில் நின்று, இனி திரும்பலாம் என்று திரும்பி வந்துவிட்டோம். 63 |
அந்தப்பாதையில் பல இடங்களில் வயல்வெளிகள். ஆனால், நெல் பயிர்ச்செய்கை இல்லை. காலம் கோடை என்பதாலோ என்னவோ. செம்மண் நிறைந்த பல தோட்டங்களில் காய்கறி பயிர்ச்செய்கை, அங்கு வெற்று மேனியுடன் சாரத்தை கட்டியபடி சில முதியவர்கள். சூரியன் அஸ்தமிக்கும் மாலையில் செம்மண்ணின் மீது விழும் அந்த மஞ்சள் சூரியக்கதிர். திறந்திக்கும் பெட்டிக்கடை, அங்கு வெளியே தொங்கும் வாழைக்குலைகள். கடைக்கு முன்பே சில வாங்குகள், அதில் அமர்ந்தபடி சிலரின் அரசியல் சாணக்கியங்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக கல்லுப்பிள்ளையார்கள், அதற்கு முன்னே நின்று சிலரின் வேண்டுதல்கள். எல்லாமே அழகாக இருந்தது. 64 |
என்னோடு வந்த இருவரும், என்னைப்போல் யாழ்ப்பாணத்தை பார்க்க ஆசைப்பட்டவர்கள் என்பது எனக்கு கிடைத்த வரம். கொழும்பில் இது போல் பல தருணங்களை நான் பார்த்திருந்தாலும், வந்து போகும் எந்த நல்ல அனுபவங்களுடனும் ஒட்ட முடியாத ஒரு மனநிலை. ஏதோ மாற்றான் வீட்டில் சிறைப்படுத்தப்பட்ட ஒரு மனநிலை எப்போதும் எனக்கு அங்கே இருந்து கொண்டே இருந்தது. இங்கு இரவானால் கூட பரவாயில்லை எந்த வித பயமும் இன்றி சுதந்திரமாக சுற்றித்திரியக்கூடியதாய் இருப்பதே பெரியதொரு விடயம். 65 |
வீடு வந்த சேர்ந்த போது இரவாகிப்போயிருந்தது. பெரியவர்கள், எங்கே போனார்கள் இவர்கள் என்று கவலைப்பட ஆரம்பித்த நேரம், நாங்கள் வந்து சேர்ந்து விட்டிருந்தோம். அன்று மிஞ்சிய இரவு, சில அரட்டைகளுடனும் பல கிண்டல் பேச்சுகளுடனும் கழிந்து போயிற்று. 66 |
எங்களிடம் இருப்பது இன்னும் ஒரே ஒரு நாள் மாத்திரம். அந்த நாளில் யாழ்ப்பாணத்தில் நெடுந்தூரம் பயணித்து பார்க்கவேண்டும் என்று ஆசை. திங்கள் காலை, அப்பா என்னை அவரின் உறவினர்கள் வீட்டை அழைத்து செல்வதாக திட்டம். ஆனால், நானும் எனது சகாக்களும் காரைநகர் போவதாக திட்டம். அப்போது, காரைநகரில் அமைந்திருந்த வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிற்கு, எமது நெருங்கிய உறவினர் ஒருவர், கொழும்பிலிருந்து முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் எங்களை அங்கே வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். இது நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ, அதை செய்யும் அளவுக்கு வழி அமைத்துத்தந்தது. அப்பாவிடம் என் ஆசையை சொன்ன போது, “அட உங்கட பெரிய பாட்டாவை பார்க்க போகலாம் என்று இருந்தனான்” என்றார். சில வினாடிகளில் யாரோடு போகப்போகிறேன் என்று விசாரித்துவிட்டு, தலையை சரி என்று ஆட்டி அனுமதி தந்தார். பின்பு எனக்கு செலவுக்கு இரண்டு ரூபாய்கள் கொடுத்தார். அதில் அன்றைய பேரூந்து செலவு போக மிகுதியை அடித்த வாரம் முழுதும் பாடசாலை கேன்டீனில் பொறிக்கடலை வாங்கி உண்டேன். 67 |
காலை மானிப்பாயிலிருந்து மீண்டும் யாழ்ப்பாண நகர்ப்பகுதி போனோம். யாழ்ப்பாண நகர்ப்பகுதிக்கு போனதும் மகிழ்ச்சி இருமடங்காகின. யாரோ ஒலிபெருக்கியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்தத்தமிழும் அந்த மதுரக்குரலும் கேட்க அழகாக இருந்தது. தொடந்து தமிழ் பாடல்கள். இவை யாவும் அரை மைல் தூரமாவது கேட்கக்கூடியவாறு இருக்கும் என்று சொல்லிக்கொண்டேன். அந்த குரலும் அதை தொடர்ந்து வந்த தமிழ் சினிமா பாடல்களும் என்னை எங்கேயோ கொண்டுபோய்விட்டன. இது கொழும்பில் நடக்கமுடியாத ஒரு செயல். தமிழில் பேசவே முடியாது. பாடுவதாவது. அதுவும் ஒலிபெருக்கியில்! 68 |
யாழ்ப்பாண நகரை அவசர அவசரமாக ஒரு மணிநேரம் சுற்றி பார்த்துவிட்டு, காரைநகர் போகும் பேரூந்தில் ஏறிக்கொண்டோம். அந்த பேரூந்து மானிப்பாய் ஊடாகப்போய் காரைநகரை சேரும் போது, காலை பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டிருந்தது. இந்த பேரூந்து பிரயாணமும் மறக்க முடியாதவை. முதன் முதலாக கடல் வழிப்பாதையினூடே பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பேரூந்து அந்த வழியே போன பொழுது கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இன்று போல் இருவழிப்ப்பாதையாக அது இருக்கவில்லை. எதிரே இருந்து வரும் வாகனங்களுக்கு இடம் கொடுப்பதற்காக, இடையில் கொஞ்சம் பாதை பெரிதாக இருக்கும். அனுராதபுரத்தில் எங்கள் புகையிரதம் நின்றது போல. அந்தப்பாதையின் இருபக்கமும் கடல்கள் என்று எண்ணிய போதே கொஞ்சம் பயமாக இருந்தது. அங்கே சில மீனவர்கள் கடலுக்குள் நின்றபடி மீன்பிடித்துக்கொண்டு நின்றதைப்பார்த்தபொழுது, அது ஒன்றும் ஆழமான கடல் இல்லை என்று தெரிந்தது. 69 |
காரைநகரில் எங்களுக்காக அந்த அண்ணன் காத்திருந்தார். அவருடைய தொழிற்சாலை எப்படி இயங்குகின்றது என்பதை காட்டிய பின், எமக்கு நல்லதொரு யாழ்பாணத்து சுவை கொண்ட பகல் உணவையும் தந்துவிட்டு, எங்களை வழியனுப்பி வைத்தார். 70 |
இன்று மிஞ்சிய இரவும், சில அரட்டைகளுடனும் பல கிண்டல்பேச்சுகளுடனும் கழிந்து போயிற்று. 71 |
காலை நான்கு மணிக்கே எழுந்துவிட்ட அப்பா, என்னையும் அவசரமாக எழுப்பி “நேரம் ஆகிவிட்டது” என்றார். இன்று கொழும்பு திரும்பும் நாள். அவசர அவசரமாக எழுந்து மானிப்பாய் சந்தியில் வந்து சேர்ந்த பேரூந்தில் ஏறி, காங்கேசன்துறை புகையிரத நிலையத்துக்கு போனோம். வீட்டில் இருந்து புறப்பட்டபோது நாங்கள் தேநீரும் அருந்தவில்லை. யாரையும் எழுப்ப வேண்டாம் என்று சத்தமில்லாமல் எழுந்து வந்து விட்டோம். எங்கள் நல்ல காலத்துக்கு, காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் ஒரு தேநீர் கடை இருந்தது. இரண்டிரண்டு வடைகளும் உண்டு தேநீரும் வாங்கிப்பருகிக்கொண்டோம். காலைப்போசனத்துக்காக என்ன வாங்கினோம் என்று நினைவில்லை. வழியிலும் வாங்குவதற்கு வசதிகள் இருந்தனவோ என்னவோ. உண்ணாமலேயே கொழும்பு வரை வந்தோமா என்று கூட நினைக்கிறேன். 72 |
இன்று செவ்வாய்க்கிழமை என்பதாலும், காங்கேசன்துறை புகையிரத நிலையம் முதலாவது புகையிரத நிலையமாக இருப்பதாலும், அது வெறிச்சோடித்தான் கிடந்தது. இருக்கையை பிடிப்பதற்கு அவசரம் எதுவும் தேவைப்படவில்லை. 73 |
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி போகும் போது, இரவில் பயணித்ததால் வேறு விதமான பிரயாண அனுபவங்கள். புகையிரதத்துக்குள்ளே என்னதான் நடக்கிறது என்று பார்த்துக்கொண்டே வந்தேன். இன்று பகல் நேரப்பயணம். வெளியே என்னவெல்லாம் நடக்கபோகின்றன என்பதில் மிகவும் ஆர்வமாய் இருந்தேன். புகையிரதம் சாவகச்சேரியை வந்து அடையும் வரை கொஞ்சம் இருள்தான். பின் சூரியன் மெதுவாக மேலே தோன்றி யாழ்ப்பாண மண்ணுக்கு அழகு சேர்த்துக்கொண்டிருந்தான். நெடிய நெடிய பனைமரங்கள் இந்த சூரிய உதயத்தில் அழகாகத்தெரிந்தன. ஆனையிறவு வெளியை தாண்டும் போது, கிழக்கு கடல் சார்ந்த வானமும் மேற்கு கடல் சார்ந்த வானமும் மிக மிக அழகாகத்தான் இருந்தது. தொடந்து வந்த பல தமிழ் நகர புகையிரத நிலையங்களை கொஞ்சம் ஆழமாகப்பார்க்கக்கூடியதாக இருந்தது. புகையிரத நிலைய ஒலிப்பெருக்கிகளில் வந்த தகவல்கள் அழகியத்தமிழில் கேட்டது. 74 |
புகையிரதம் வவுனியாவை தாண்டும் போது மனதில் கொஞ்சம் நெருடல். இனி சிங்கள நகரமான மதவாச்சி, அதை தொடர்ந்து எல்லாமே சிங்களம் தான். பல நல்ல அனுபவங்கள் மனதில் மகிழ்வை கொணர்ந்திருந்தாலும், அம்மாவையும் டைகரையும் பார்க்கபோகிற சந்தோஷங்கள் நிரம்பி இருந்தாலும், யாழ்ப்பாணத்தில் விட்டு பிரியும் சோகம் மேலோங்கியிருந்தது. வெளியே சில தருணங்களில் பெய்த அடைமழை, வெளியே எதையும் பார்க்க முடியாமல் தடுத்திருந்தது. மழை முடிந்த பின்பும், கண்ணாடி யன்னல்களில் படிந்த சேற்று மண், வெளியே எல்லாவற்றையும் மறைத்திருந்தது. செய்வதற்கோ அன்றில் பார்ப்பதற்கோ அங்கே எதுவும் இல்லாமல், மீதி பயணம் முழுதும் பல நினைவுகளுடன், நான் வெளியே பார்த்தபடி பயணித்துக்கொண்டிருந்தேன். 75 |
‘அப்பா யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறாமல் இங்கேயே இருந்திருந்தால், நானும் இங்கே பிறந்திருப்பேன். நன்றாக இருந்திருக்கும்,’ என்று ஒரு நினைவு வந்து போயின. 76 |
‘டைகர் எனக்காக காத்திருப்பான். என்னைப்பார்த்தவுடன் என்மேல் பாய்வான்,’ என்ற நினைவும் வந்து போயின. 77 |
‘அம்மா பல செய்திகளை கேட்க ஆசையுடன் இருப்பார்,’ என்ற நினைவும் வந்து போயின. 78 |
‘என்னை கண்டு கொள்ளாத பள்ளி சகாக்கள், வாய் பிளந்தபடி நான் சொல்வதை கேட்க வேண்டும் என்பதற்காக, நடந்தவைகளிலே என்னை பெரிதாக காட்டக்கூடிய சம்பவங்களை சொல்லவேண்டும்,’ என்ற நினைவும் வந்து போயின. 79 |
‘பல காலம் யாழ்ப்பாணம் வராத அம்மாவை ஒருமுறை யாழ்ப்பாணம் கூட்டி வர வேண்டும்,’ என்ற நினைவும் வந்து போயின. 80 |
‘நடந்தவைகளை, அண்ணன் அக்காமார்களுக்கு, கொஞ்சம் கூட்டித்தான் சொல்லவேண்டும்,’ என்ற நினைவும் வந்து போயின. 81 |
இதே போல் கட்டுக்கடங்காமல் பல நினைவுகள் வந்து போயின. 82 |
இந்த முறை புகையிரதம் கொழும்பு கோட்டை வரை வந்து சேரவில்லை. ஜாஎல எனும் புகையிரத நிலையத்தில் பயணத்தை நிறுத்திக்கொண்டது. அந்தப்புகையிரத நிலையம் எங்கள் ஊருக்கு மிக அருகாமையில் இருந்தப்படியால், நாங்கள் வீடு வந்து சேர வசதியாகப்போய்விட்டது. 83 |
வீடு வந்த பொழுது பிற்பகல் ஐந்துக்குமேல் ஆகிவிட்டிருந்தது. வீட்டினுள்ளே வந்ததும் அம்மாவுக்கு முத்தம் கொடுத்தேன். ஆனால், அம்மாவின் முகத்தில் ஒரு சோகம் இருந்தது பளிச்சென்று தெரிந்தது. தனக்கு போகமுடியாமல் போனதை நினைத்து கவலைப்படுகிறாரோ என்னவோ என்று நினைத்துக்கொண்டேன். எதிபார்த்து வந்த டைகர் வீட்டில் இல்லை. எங்காவது ஊர் மேய போயிருப்பான் என்று நினைத்துக்கொண்டேன். இரவு முழுதும் பிரயாணத்தைப்பற்றி மற்றயவர்க்கு சொல்லி மாளவில்லை. எல்லோரும் காது கொடுத்துக்கேட்டார்கள். ஆயினும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 84 |
அடுத்த நாள் டைகரை ஏன் இன்னும் காணவில்லை என்று அம்மாவிடம் விசாரித்தபோது, அந்த கேள்விக்காக காத்திருந்த அம்மா, ஏற்கனவே தயார்படுத்தி வைத்திருந்த பல பதில்களை அடுக்கடுக்காக சொல்ல ஆரம்பித்தார். 85 |
“அண்டைக்கு உங்களுக்கு பின்னால வந்தவன். திரும்பி வரயில்ல.” 86 |
நெஞ்சம் கொஞ்ச நேரம் நின்று தான் போனது எனக்கு. நான்கு நாட்கள் கடந்தபின்னுமா வரவில்லை. 87 |
“அது தேடி வரும். கவலைப்படவேண்டாம்.” 88 |
“எல்லாரும் எங்கெல்லாமோ தேடிப்பாத்திட்டம். போகும் இடமெல்லாம் டைகரை போல தெரிந்த நாய்களையெல்லாம் டைகர் என்று கூப்பிட்டும் பார்த்திட்டம்.” 89 |
“நொண்டிக்கொண்டு திரிஞ்ச நாய்கள எல்லாம் கிட்டப்போய் பார்த்தனாங்கள், காரில, பஸ்ஸில அடிப்பட்டிருக்கும் எண்டு.” 90 |
இவை எல்லாம் அம்மா, என்னை சமாதானப்படுத்த சொன்னவை. வீட்டில் மற்றயவர்களும் அதைத்தான் சொன்னார்கள். நானும் சில நாட்கள் ஊரெல்லாம் திரிந்து டைகர் போல் தெரிந்த நாய்களையெல்லாம் “டைகர்” என்றெல்லாம் அழைத்துப்பார்த்தேன். நொண்டிக்கொண்டு திருந்த நாய்களையெல்லாம் கிட்டே போய் பார்த்தேன். போன பாதையெல்லாம் சந்தித்த பலரிடம் டைகரைப்பற்றி கேட்டும் பார்த்தேன். ஆயினும், என்னால் டைகரை தேடிக்கண்டு பிடிக்க முடியவில்லை. அவனும் திரும்பி வரவேயில்லை. நிரந்தரமாக தொலைந்து போயிருந்தான். 91 |
பின் வந்த மாதங்கள் பல என்னை இரட்டை சோகங்களுக்குள் அமுக்கி வைத்திருந்தன. 92 |
ஒன்று யாழ்ப்பாணத்தை பிரிந்த சோகம். இரண்டாவது “டைகர்”. 93 |
சில காலம் கடந்த பின், அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையும் இழந்து போய், எல்லோரும் அவனை மறந்து விட்ட நிலையில், என்னால் இலகுவில் அவனை மறக்க முடியவில்லை. திரும்பி வருவான் என்று ஒரு நினைப்பு, என்னுள் இருந்து கொண்டே இருந்தது. யாரும் அவனை பற்றி அதிகமாக ஒருவருக்கொருவர் பேசாவிட்டாலும், அவனுக்கு ஏதோ நடந்துவிட்டதென்ற சோகம், எங்கள் எல்லோருக்கும் உள்ளே பல காலம் இருந்து கொண்டே இருந்தது. அவன் வாகனம் எதிலும் அகப்பட்டு அனாதையாக இறந்து போயிருப்பான். அல்லது, வழிதவறி எங்கோ ஒருநாள் தெருநாயாக செத்துப்போயிருப்பான். இதை இன்று நினைத்தாலும், நெஞ்சில் ஒரு லேசான வருடல். ‘பல நல்ல நட்புகளை, பிரயாணங்களால் பிரிய வேண்டிவரும் என்பது மாத்திரமன்றி, அவர்களை சில நேரம் நிரந்தரமாகவே பிரியவேண்டி வரும்,’ என்பதையும், அன்று மேலும் உணர ஆரம்பித்தேன். 94 |
ஆசிரியர் ஒருவர், “என்ன உதயதர்ஷன் யாழ்ப்பாணம் போனீராம்” என்று கேட்டதற்கு, “ஓமோம் சேர்” என்று வாய் இளித்தபடி சொன்னேன். மேலும் சொல்ல ஆசை. டைகரை பற்றியும் சொல்லவேண்டும் என்று ஆசை. ஆனால், ஆசிரியர் மேலதிகமாக எதுவும் கேட்கவில்லை. 95 |
பள்ளி சகாக்களுக்கு சொல்லி மகிழவேண்டும் என்று தீட்டிய செய்திகள் எல்லாவற்றையும் சொல்ல பல சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும், பெரியதொரு வீம்போடு எதையும் சொல்ல முடியவில்லை. டைகரின் பிரிவு, சோகமாக உள்ளே அமர்ந்திருந்தது. 96 |
யாரை நான், ‘வந்து கவனித்துக்கொள்ளவேண்டும்’ என்று நினைத்து விட்டுபோனேனோ, அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து டைகரின் பிரிவைப்பற்றி சொல்ல முயற்சித்த வேலையெல்லாம், அது சரிபடவில்லை. தவறிப்போனது. 97 |
அண்ணன்மார்களுக்கும் அக்காமார்களுக்கெல்லாம் கூட்டிச்சொல்ல நினைத்த எல்லா சம்பவங்களையும் சொல்லமுடியவில்லை. நடந்ததையே முழுமையாக சொல்லமுடியாத மனச்சோர்வின் நிலையில் இருக்கும் பொழுது, எப்படி கலப்படம் செய்து சொல்வது. 98 |
என் பிரயாணத்தை பற்றி, பின், நான் யாருடனும் பேசாவிட்டாலும், இரவு பகல் எல்லாம் அந்த பனைகளும் வெட்டவெளிகளும் கடல்வழிப்பாதைகளும் உறவினர்களின் கொண்டாட்டங்களும் இன்னும் பல சுகமான நினைவுகளும், பல காலம் என்னோடு பயணித்தன. அதே நேரம், நான் யாழ்ப்பாணத்தில் சந்தோஷமாக சுற்றி திருந்து கொண்டிருந்த போது, டைகர் இங்கெங்கேயோ அனாதையாக செத்துப்போய் கிடந்திருப்பான் என்ற எண்ணமும் நெஞ்சை பல முறை தாக்கிக்கொண்டே இருந்தது. 99 |
ஆனால், 1977ம் ஆண்டு இனக்கலவரத்துக்குப்பின், நாங்கள் அவசர அவசரமாக, நாங்கள் வாழ்ந்த அந்த சிங்கள ஊரைவிட்டு தொலை தூரம் போய் விட்டோம். டைகர் எங்களை தேடி வரும் கிட்டிய தூரத்திலும் நாங்கள் இருக்கவில்லை. புதிய இடமும் புதிய வாழ்க்கையும் புதிய நட்புகளும் புதிய அனுபவங்களும், டைகரை கொஞ்ச கொஞ்சமாக என் நினைவுகளில் இருந்து மறைத்து விட்டன. இந்த இனக்கலவரம், மீண்டும் நாங்கள் நாற்பத்து ஐந்து நாட்கள் யாழ்ப்பாணத்தில் வசிப்பதற்கு, ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து தந்தது. அது எனக்கு கிடைத்த இன்னுமொரு பெரிய பொன்னான காலம். 100 |
அப்பாவின் விருப்பமோ என்னவோ, அன்று அப்பா ஆரம்பித்து வைத்த எனது முதல் பயணம், இன்று வரை தொடர்கிறது என்பது எனக்கே ஒரு புரியாத விந்தை. இது தான், நான் அப்பாவுடன் போய் வந்த முதலும் கடைசியுமான பிரயாணம். இதற்கு பின், இருவரும் ஒன்றாக எங்கும் பயணிக்க சந்தர்ப்பங்கள் வந்து அமையவே இல்லை. அப்பா, அதற்கு பின் தன் வாழ்நாளில், இரண்டு தடவைகள் தான் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அதுவும் இரண்டு இனக்கலவரங்கள் (1977ம் 1983ம்) வந்த போது, கட்டாயத்தின் பேரில். இன்று அவர் என்னோடு இல்லை என்றாலும், அவருடன் நான் பயணித்த ஒரேயொரு பயணத்தை முழுமையாக மீள நான் என் சிந்தனைக்குள் கொண்டு வர முடிந்தது, நான் செய்த பாக்கியமே. 101 ★ |
 |