தமிழில்
ஷான் உதே
Subhashini.org
  
எழுதுவதும் தீதே
வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
561 reads • Jun 2025
தயவு செய்து என்னை வாசிக்கவும்
வகை: உண்மை நிகழ்வுகள்/நினைவுக் குறிப்புகள்
649 reads • Jun 2025
நான் ஒரு வெறும் தெரு துப்புரவாளர் அல்ல
வகை: சிறுகதைகள்
310 reads • Apr 2025
எனது முதல் ரயில் பயணம்
வகை: பயண நினைவுகள்
1076 reads • Apr 2025
எழுதுவதும் தீதே
ஷான் உதே
   தமிழில்
  1980. உயர்தரம் முதலாம் ஆண்டு கற்ற காலம் அது. எங்கே தொடங்கி எங்கே முடிவது என்று தெரியாமல் உலாவித்திருந்த காலம்.
1
பள்ளியில் பத்தாயிரம் பாடங்கள் ஒருபுறம் பயமுறுத்த, வாசித்த கதைப்புத்தகங்களையே மீண்டும் மீண்டும் புரட்டிப்புரட்டிப்பார்க்கின்ற காலத்தேவைகளும் மறுபுறம் வந்த வண்ணமே இருந்தன. அத்தோடு பார்த்தவர்களெல்லோரிடமும் நட்பு பகிர வேண்டிய ஆசைகள் வேறொரு புறம் அவைகளுடன் சேர, எல்லாமே பல ஒழுங்கற்ற கோடுகளாய் குறுக்கும் மறுக்குமாக பயணித்துக்கொண்டிருந்த காலம்.
2
இந்த இழுபறிகளுக்குள், வாசிப்புகளால் உந்தப்பட்டு எழுதும் ஆசையும் எங்கேயோ இருந்து வந்து சேர்ந்துவிட்டது. அந்த ஆசைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நிவர்த்தியாக்கி, பத்திரிகை ஒன்றை தொடங்கலாம் என்று மனதில் ஒரு நம்பிக்கையும் ஒரு நாள் வந்து சேர்ந்துவிட்டது.
3
வாசிப்பதன் மீது விருப்பம் கொண்ட நான்கைந்து நண்பர்களை சேர்த்துக்கொண்டேன். நாங்கள் பத்திரிகை தொடங்க பணத்தை சேர்க்க ஆரம்பித்தோம். அப்பா அம்மாவை கெஞ்சி கொஞ்சி கேட்டெடுத்தவன் ஒருவன். பாடசாலைக்கு நடந்தே வந்தே பஸ் பணத்தை சேர்த்து தந்தவன் ஒருவன். பகல் உணவுக்காக கொடுத்த “பாக்கெட் மணி”யை தாரைவார்த்து தந்தவன் ஒருவன். ஆசிரியர் பொறுப்பை எனெக்கென்று நானே ஒதுக்கி வைத்ததனால், என் சார்பில் பணம் சேர்க்க அவசியமேற்படவில்லை. அதை கேள்வி கேட்க, யாருக்கும் எந்த தகுதியும் கொடுக்கப்படவுமில்லை.
4
எங்கள் பத்திரிகை வளர ஆரம்பித்தது. அதற்கு, “தூண்டில்” என்றும் பெயரும் வைத்தோம்.
5
நாங்கள் பத்திரிகை தொடங்கிய அதே காலகட்டத்தில், பாடசாலை தமிழ் ஆசிரியர் அனுசரணையுடன், அதிகாரபூர்வமாக, உயர்தர மாணவர்களை கொண்டு ஓர் கையெழுத்து பத்திரிகை ஆரம்பிக்க ஆயத்தங்கள் நடக்க ஆரம்பித்தன. இது நாங்கள் பத்திரிகை ஆரம்பித்ததினால் உருவான பக்க விளைவா, அல்லது அவர்களுக்கு ஏற்கனவே இது தோன்றியிருந்த ஒரு எண்ணமா என்று தெரியவில்லை. இருப்பினும், அதில் எம்மை போன்ற ஆர்வமுள்ளவர்களை சேர்க்க முயற்சிகள் எடுக்கப்படவில்லை. மாறாக, சொல் கேட்டு நடக்கும் ஒரு சில செல்லப்பிள்ளைகளை சேர்த்துக்கொண்டார்கள்.
6
இது எமக்கு ஒரு புத்துணர்ச்சியை தந்தது. எமக்கெதிராக ஒரு பெரும் படையே திரள்கிறது அங்கே, என்று போர் முரசு கொட்டினோம். எம்மை ஓரம் கட்டவும், யாருமே எம்மையும் எமது பத்திரிகையையும் அடையாளம் காண விடாமலும் செய்யும் சூட்சுமம் என்றும், யாரும் எம்மோடு சேர்ந்து விடாமலும் தடுக்கும் முயற்சி என்றும், அதீத கற்பனைகளை எமக்கே நாமே சொல்லிச்சொல்லி மகிழ்ந்தோம். இருப்பினும், அவர்கள் தரப்பிலிருந்து நாங்கள் எண்ணியபடி செயலளவில் எவ்வகையான சலசலப்பும் ஏற்படாத நிலையில், எமது பத்திரிகை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது.
7
எதை எழுத போகிறோம் என்று ஓர் நிலை புரியாமல், அவசர அவசரமாக, எதையெதையோ எழுத ஆரம்பித்தோம். எழுத தெரியாமல் சிந்தனை பலதடவை (எல்லாத்தடவைகளிலும்) செயலிழந்து போயின. அவ்வெற்றிடத்தை நிரப்ப தினப்பத்திரிகைகளிருந்து திருடிக்கொண்டோம். எழுதியவைகளில் சரியென்று பட்டதை அச்சிட சேர்த்துக்கொண்டோம்.
8
சேர்ந்த பணத்தையும் சேர்ந்த ஆக்கங்களையும் கொண்டு சென்று, எங்கள் பாடசாலை பரீட்சைக்கு கேள்வித்தாள் அச்சிடும் அச்சகத்தில், பேரம் பேசியதோர் விலைக்கு, சிலவோ பலவோ, எத்தனை பிரதிகள் என்று ஞாபகம் இல்லை, அச்சடித்துக்கொண்டோம்.
9
எங்கள் கையெழுத்துக்கள் அச்சாகும் அந்த செய்கை முறையையும் தூர நின்றே ரசித்தோம். அவர்கள் அதை முதல் தட்டச்சுப்பொறியில் தமிழில் அடித்துக்கொண்டார்கள். பின் அதை ரோனியோ (roneo) இயந்திரத்திலிட்டு பல பிரதிகள் எடுத்துக்கொண்டார்கள். பின் அவற்றை புத்தகமாக கட்டி எங்களிடம் கொடுத்தார்கள்.
10
பிரதிகளை கைகளில் பெற்ற பொழுது, இது நாங்கள் நான்கு வாரங்கள் சுமந்து பெற்ற குழந்தை என்று மகிழ்ந்தோம். ஒருவன் புன்னகைத்தான். ஒருவன் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினான். மூன்றாமவன் சிரித்துக்கொண்டு அழுதான். நான் அழவுமில்லை, சிரிக்கவுமில்லை. அதிகாரபூர்வமாக நான் அன்றைய தினம் ஒரு பத்திரிகை ஆசிரியன். ஒரு பத்திரிகை ஆசிரியனாகி விட்டேன் என்ற ஒரு பொறுப்புணர்ச்சி. எழுத்தாளன் உணர்வுகளை வெளிக்காட்டலாமோ. இனிவரும் சமுதாயத்துக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டாமோ.
11
புத்தக கட்டிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து திறந்து பார்த்தோம். எல்லாமே அழகாய் தோன்றின. அதற்குள் சில சொந்த படைப்புகள் இருந்தன. பெரும்பகுதி மறு பதிப்பாகத்தான் இருந்தது. இருப்பினும், எழுதுவதும் பத்திரிகை ஆரம்பிப்பதும் இலகு என்று ஓர் நம்பிக்கை உருவாகிற்று.
12
அதிகாரபூர்வமாக, மற்றைய கையெழுத்து பத்திரிகைக்கு பொறுப்பான அந்த தமிழ் ஆசிரியருக்கே முதல் பிரதியை கொடுப்பது தான் நல்லது என்ற எண்ணத்தில், அந்த ஆசிரியர்க்கு பிரதி ஒன்றை கொடுத்தோம். ஏற்கனவே நாங்கள் பிரதிகளை அச்சடித்து முடித்துவிட்டது தெரிந்திருந்தும், தெரியாதவர் போல பிரதியை எடுத்தவர், பார்த்தும் பார்க்காமல் திருப்பித்தர பார்த்தார். உங்களுக்கு தான் சேர் இது என்று வாய் பிளந்தபடி சொன்னேன். அவர் அதை எடுத்து வைத்துவிட்டு தலை அசைத்தார். அது “சரி நீங்கள் போகலாம்” என்ற வீம்பு அதில் அளவுக்கு அதிகமாகவே நிரம்பி வழிந்தது.
13
மறுநாள் அவரது அபிப்பிரயாயங்களுக்காக தவம் கிடந்தோம். ஆனால், அவரது பார்வை எம்மீது கொஞ்சம் முறைப்பாக இருந்தது. இதிலிருந்து வாத்தியாருக்கு அது பிடிபடவில்லை என்று தெரிந்துகொண்டோம். “தாங்கள் ஆசிரியர்கள், எங்களை கேட்காமல் எப்படி இவர்கள் சுட்டிப்பசங்கள் பத்திரிகை ஆரம்பிக்கலாம்”, என எங்கள் காதில் போடும்படி ஆள்வைத்து சொல்லக்கேட்டோம். செய்தி காவி வந்த அவர்களின் செல்லப்பிள்ளையிடம், “ஏன்?” என்று கேட்டபொழுது, “தம்மைப்பற்றி எதையாவது எழுதி விடுவீர்களோ என்று பயப்படுகிறார்கள்” என்றார். அவற்றை வெளியிட கூடாது என்று மறைமுகமாக மீண்டும் மீண்டும் அவர்கள் “அடியாட்களை” வைத்து எமக்கு உணர்த்தினார்கள். எங்கள் இந்த சின்ன முயற்சி பெரிய போராட்டமாக பார்க்கப்பட்டது. எழுதுவதன் ஆரம்பமே அரசல் புறசல்.
14
எமது பத்திரிகையின் ஏனைய “எழுத்தாளர் குழுவும்”, வேண்டாம் விட்டுவிடுவோம் என்றார்கள். வீட்டுக்கு தெரியவரும் என்று பயந்து தான் போனார்கள் போல. நாங்கள் என்ன ஊர் ஊராக திரிந்து ஊர் பெண்பிள்ளைகளை சீண்டிக்கொண்டா திரிந்தோம், இப்படி பயந்து போய் கிடப்பதற்கு. “ஆசிரியர்களை எதிர்க்கக்கூடாது” என்று சில குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிரொலித்தன. காலப்போக்கில், அதன் வெளியீட்டை உந்தித்தள்ள என் பத்திரிகை குழுவில் யாருமே முன் வராமல், ஏதேதோ சொல்லி தட்டி கழித்தார்கள்.
15
என்னால் தன்னந்தனியே, பல நாட்கள் அதை முன்னெடுத்துச்செல்ல முடியவில்லை. அது முடமாகிப்போனது அத்தோடு. இதற்காகவே காத்திருந்தவர்கள் பலர், தங்கள் புன்னகையில் ஏளனத்தையும் கலந்திருந்தார்கள். சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்று, பின்முதுகுப்புறம் நின்று ஊளையிட்டுவிட்டுப்போனார்கள். உண்மையோ என்று சிந்திக்க ஆரம்பித்தேன். முட்டுக்கட்டை போடப்பட்டது அத்தோடு. ஒரு சிலரின் ஆதிக்கத்திற்கு, எத்தனை சுதந்திர எண்ணங்களையும் முடக்கிப்போடும் வல்லமை இருக்கிறது என்பதை நான் எனது பாடசாலையில் அன்று கற்றுக்கொண்ட பாடம். பாடப்புத்தகத்தில் இல்லாத பாடம்.
16
அந்த தமிழ் ஆசிரியரும், அவரது மாணவர் “எழுத்தாளர்கள் குழுவும்” ஆரம்பித்த கையெழுத்து பத்திரிகை, ஆரம்பத்தில் முப்பெரும் (ஆசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகம்) படையுடன் இலக்கை நோக்கி பல நாட்கள் முன்னேறின. வென்றுவிடுவார்களோ என்று பொறாமை கொண்டோம். ஆனால், பின்னொரு நாளில், அதுவும் இறந்து போன செய்தி வந்து சேர்ந்த போது, எமக்குள் மனசு கொஞ்சம் சிரித்து மகிழ்ந்தது. அதன் பின்னடைவுக்கான காரணம் கேட்டபொழுது, பரீட்சை நெருங்குகிறது என்றார்கள். பத்திரிகை ஆரம்பித்த போது, பரீட்சை வரும் என்று, பாவம் இந்த எழுத்தாளர் கும்பலுக்கு தெரியாமல் போனது பெரியதொரு விந்தை. நாங்களாவது அச்சுவரை போனோம். அவர்கள் ஆக்கங்களை சேர்க்கும் வரை வீராவேசமாக போனாலும், அவற்றை கோர்க்கும் நிலையில், கோவணம் கழன்று போனது என்னவோ உண்மைதான். பரீட்சை முடிந்த பின்பு அவை மீண்டும் தூசி தட்டி எடுக்கப்படாதபோது, அது நிரந்தரமாக புதைக்கப்பட்டும் விட்டது என்பது உறுதியாயிற்று. தெருமுனை தேநீர் கடையில் வடையும் தேநீரும் அருந்தி துக்கம் கொண்டாடினோம்.
17
தமிழ் ஆசிரியருக்கும் எனக்கும் இடையிலான நட்பும் மரியாதையும், நான் அந்த பாடசாலையில் வாழ்ந்த பின் வந்த இரண்டு வருடங்கள், சரியாகவும் சமநிலையிலும் இருக்கவில்லை. ஆனால் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட நாங்களும், சுயமாகவே வீழ்ந்துவிட்ட மற்றைய கையெழுத்து பத்திரிகையின் ‘எழுத்தாளர்கள் குழுவும்’, நல்ல நண்பர்கள் ஆகிவிட்டிருந்தோம். இரண்டு குழுவும் தேடல்களில் தம்மை தொலைத்தவர்கள் அல்லவா.
18
பல காலங்கள், அந்த ஆசிரியரின் மேல் இருந்த பகை உணர்வை தேவையுடன் சுமந்தபடி, வாழ்வு ஓடிக்கொண்டிருந்தது. பின்னாளில் ஒரு நாள், அவரை எதற்சையாக பாதையில் சந்தித்தபோது, “நல்லா இருக்கிறிங்களோ?” என்று பன்மையில் குசலம் விசாரித்தார். இளகிப்போனது மனசு. “ஓமோம் சேர்” என்றேன். “வேளாண்மை இன்னும் வீடு வந்து சேரவில்லை.” என்று நானே மேலதிகமாக சொல்லவேண்டும் போல் தோன்றியது. ஆனால் அவர் முகத்தில் தோன்றிய “தவறு செய்து விட்டோமோ” என்ற ஒரு முகபாவனை, என்னை ஒருகணம் தடுத்தது.
19
“ஆமாம் நீங்கள் தவறு தான் செய்து விட்டீர்கள். உங்கள் நிர்வாகத்துக்கு எங்களை அழைத்து விளக்கம் கேட்பதற்கோ, அன்றில், விளங்க வைப்பதற்கோ நேரம் கிடைக்கவில்லை. மாறாக, பின்புறம் நின்று எங்கள் முயற்சியை திசை திருப்ப, உங்களுக்கு காலங்கள் குவிந்து கிடந்தனவோ”, என்று அவரிடம் கேட்கலாமோ என்று ஒரு கணம் சிந்தித்தேன். எதையும் கிளறவேண்டாம் என்று, என்னை நானே மௌனமாக்கிக்கொண்டேன்.
20
நாங்கள் அச்சிட்ட பிரதிகள் யாவும், வெளியிடப்படாமல், மூன்று வருடங்கள் மெல்ல கடந்து போயின. எனக்கும் பாடசாலை வாழ்க்கை முடிந்து வருடம் ஒன்றானது. அதில் பங்கேற்றவர்களும் தேடப்பட முடியாத தூரங்களில் விலாசம் அமைத்துக்கொண்டிருந்தார்கள். அச்சிடப்பட்ட அந்த பிரதிகளும் என் அலமாரியின் ஒரு மூலையில், ஒரு காலம் தேவைப்படலாம் என்று தேக்கிவைக்கப்பட்டிருந்தன. பின் ஒருநாள், அலமாரியை திறக்கும்போதெல்லாம் அவை யாவும் நெஞ்சில் ஒரு விசனத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றதே என்பதற்காக, என் கைகளாலேயே அத்தனை பிரதிகளையும் தீக்கு இரையாக்கி, ‘நினைவில் இருந்து நீக்கியது’, அன்று தவிர்க்க முடியாமல் இருந்த ஒரு சோக முடிவு.
21
இது முடிந்து இன்றைய வருடம் 2022ல் நாற்பது வருடங்கள் கடந்து போயிருக்கின்றன. தீக்கு இறையானாலும், பீனிக்ஸ் பறவை போல, நினைவுகள் என்றும் உயிர்த்தெழுந்து வரும்.
22

561 reads • Jun 2025 • 952 words • 22 rows


Write a Comment

Sukanthan
July 5, 2025

நகைச்சுவையுடன் சொல்லப்பட்ட ஒரு அழகான நினைவுகள்.