 |
|
மூல எழுத்தாளர்: தெரியவில்லை மீள எழுதியது: உதயன் |
முன்னொரு காலத்தில், ஒரு காட்டில், ஒரு நரி வாழ்ந்து வந்தது. காட்டில் பாறைகளுக்கு இடையிலாயிருந்தது அந்த நரியின் வசிப்பிடம். 1 |
அங்கிருந்து, நரி தினமும் அந்தி சாயும் நேரம் உணவு தேடி வெளியே வரும். 2 |
நரி காடு முழுவதும் நடந்து சென்று, தனக்குத்தேவையான அனைத்து உணவையும் சாப்பிட்டுவிட்டு, விடியற்காலையில் தன் இடத்திற்குத்திரும்பும். 3 |
ஒரு நாள், வழக்கம் போல், நரி உணவு தேடி காடு முழுவதும் அலைந்தது. 4 |
ஆனால், அன்று நரிக்கு எதுவும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல், நரி உணவு தேடி அருகிலுள்ள கிராமத்திற்குச்செல்ல முடிவு செய்தது. 5 |
கிராமத்திற்கு வந்த நரி, உணவு தேடி அங்குமிங்கும் சுற்றித்திரிந்தது. கடைசியில், தெருநாய்கள் வசிக்கும் ஒரு இடத்திற்கு வந்து சேர்ந்தது. 6 |
நரியைக்கண்டதும் எல்லா நாய்களும் குரைத்தபடி நரியை நோக்கி ஓடி வந்தன. 7 |
என்ன செய்வது என்று தெரியாமல், நரி அருகிலுள்ள வீடொன்றில் தஞ்சம் புக முடிவெடுத்தது. 8 |
அருகிலுள்ள வீடொன்றின் மதில்மேல் பாய்ந்தேறிய நரி, யாரும் தன்னைப்பார்க்காதபடி மெதுவாக வீட்டின் பின்னால் சென்று ஒளிந்துகொண்டது. 9 |
அந்த வீட்டின் பின்னால், துணிகளுக்கு சாயம் பூசுவதற்காக சாயக்கலவைகள் பெரிய மண் பானைகளில் சேர்த்து வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. 10 |
அந்தப்பானைகளின் பக்கங்களில் பல்வேறு வகையான வண்ணங்கள் ஒட்டியிருந்தன. இதைப்பார்த்த நரிக்கு, பானைக்குள் என்ன இருக்கிறது என்பதை அறிய மிகவும் ஆர்வம் ஏற்பட்டது. ஆனால் அந்த பானை நரி எட்ட முடியாத அளவுக்கு உயரத்தில் இருந்தது. 11 |
இருந்தும், நரி எழுந்து பானைக்குள் எட்டிப்பார்த்தது. அப்போது கால் தவறி பானைக்குள் விழுந்துவிட்டது. 12 |
நரி பயந்துபோய், பானையைத்தட்டிவிட்டு, அதிலிருந்து குதிக்க முயன்ற போது பானையும் பல துண்டுகளாக உடைந்து போனது. 13 |
இந்த நேரத்தில், வீட்டின் பின்புறத்திலிருந்து பல சத்தங்கள் வருவதைக்கேட்ட அந்த வீட்டில் இருந்தோர், சத்தம் கேட்ட இடத்தை நோக்கி வந்தார்கள். 14 |
பல மனிதர்கள் தன்னை நோக்கி வருவதைக்கண்ட நரி, ‘நான் என் உயிரை காப்பாற்ற இங்கிருந்து சீக்கிரம் வெளியேற வேண்டும்,’ என்று சிந்தித்துவிட்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. 15 |
நரி தெருவுக்குத்திரும்பி வந்தபோது, சிறிது தூரத்தில் அதே நாய்கள் நிற்பதைப்பார்த்தது. 16 |
இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நரி கவலைப்பட்டது. 17 |
ஆனால், இந்த முறை நாய்கள் நரியைக்கண்டதும் குரைக்கவோ துரத்தவோ இல்லை. 18 |
மாறாக, நரியைப்பார்த்ததும் அந்த நாய்கள் பயந்து ஓடத்தொடங்கின. இதைப்பார்த்த நரி ஆச்சரியப்பட்டது. 19 |
‘என்ன இது? எல்லா நாய்களும் என்னைக்கண்டதும் ஓடுகின்றன?’ நரி நீண்ட நேரம் யோசித்தது. என்ன நடக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், ஏதோ நடந்திருக்கின்றது என்று மாத்திரம் நரிக்கு புரிந்தது. 20 |
‘நேரம் விடியலை நெருங்கி விட்டது. நாம் சீக்கிரம் காட்டுக்குப்போக வேண்டும். பின் என்ன நடந்ததென்று விசாரிக்கலாம்.’ இதைச்சொல்லிவிட்டு, நரி காட்டை நோக்கி புறப்பட்டது. 21 |
காட்டுக்குத்திரும்பும் பயணத்தில், நரி பல விலங்குகளைக்கண்டது. தன்னைக்கண்ட எல்லா விலங்குகளும் ஒன்றில் தன்னைவிட்டு ஒட்டுகின்றதையும் அல்லது தங்களை மறைத்துக்கொள்வதையும் நரி கவனித்தது. 22 |
கடைசியில், நடந்தும் ஓடியும் அடர்ந்த காட்டை அடைந்த நரி தண்ணீர் குடிப்பதற்காக ஒரு ஆற்றங்கரையில் நின்றது. 23 |
தண்ணீரில் தனது பிம்பத்தைக்கண்டபோது நரி ஆச்சரியப்பட்டது. 24 |
தன் நிறம் நீல நிறமாக மாறியிருப்பதை நரி கண்டது. 25 |
அப்போதுதான் நரிக்கு அந்த வீட்டில் வைத்திருந்த பாத்திரத்தில் தான் விழுந்தது நினைவுக்கு வந்தது. 26 |
பானை உடைந்தபோது அதிலிருந்து வெளியேறிய நீல நிற நீரையும் நரி நினைவு கூர்ந்தது. 27 |
அப்போதுதான் நரிக்கு, ஏன் சாலையில் பார்த்த நாய்களும் காட்டில் பார்த்த எல்லா விலங்குகளும் தன்னைப்பார்த்து பயப்பட்டன என்று புரிந்தது. 28 |
நரி இப்பொழுது சிந்தித்தது: ‘நிச்சயமாக, அவைகள் என்னை நீல நிறத்தில் பார்த்தபோது, அவைகளுக்கு நான் யாரென்று புரியவில்லை. நான் ஏதோ ஒரு பயங்கரமான விலங்கு என்று அவைகள் நினைத்திருக்கலாம்.’ 29 |
நீல நரிக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. நரி எவ்வளவு விரைவாக காட்டுக்குள் போக முடியுமோ அவ்வளவு வேகமாக காட்டுக்குள் போனது. 30 |
நீல நரி காட்டிற்குள் வந்ததும், மற்ற எல்லா விலங்குகளையும் ஒன்றாக அழைத்தது. நீல நரியைக்கண்டதும், அவை அனைத்தும் பயந்தன. 31 |
அவை ஒருவருக்கொருவர் முணுமுணுத்துக்கொண்டன: “இந்த நீல நிற விலங்கு என்ன? இந்த காட்டில் இதற்கு முன்பு எங்கும் இந்த வகையான விலங்கை நாங்கள் பார்த்ததில்லை. அதைப்பார்த்தாலே நமக்கு பயமாக இருக்கிறது.” 32 |
இதைப்பார்த்த நரி அவர்களிடம் சொன்னது: “இன்று முதல் நான் தான் இந்த காட்டின் ராஜா. நீங்கள் அனைவரும் எனக்குக்கீழ்ப்படிய வேண்டும். நாளை முதல், எனக்குத்தேவையான உணவை நீங்கள் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும்.” 33 |
நீல நரியைப்பார்த்து பயந்த விலங்குகள், சிறிதும் ஆட்சேபிக்கவில்லை. 34 |
அன்றிலிருந்து, நீல நரி காட்டின் ராஜாவானது. விலங்குகள் பயந்து அவனுக்குக்கீழ்ப்படிய ஆரம்பித்தன. 35 |
அன்று முதல், நீல நரிக்கு உணவு தேடி அலைய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மற்றய விலங்குகளும் நீல விலங்கைப்பார்த்து பயந்து, அன்றிலிருந்து, உடனடியாக அதற்கு உணவைக்கொண்டு வந்தன. 36 |
விலங்குகள் பயந்து தனக்குக்கீழ்ப்படிந்ததை நீல நரி மிகவும் விரும்பியது. 37 |
அதனால்தான் நீல நரி தன் நெருங்கிய நண்பர்களான நரிகளிடம் கூட தான் ஒரு நிறம் மாறிய நரி என்று சொல்லவில்லை. 38 |
இப்படியே பல நாட்கள் கடந்துபோயின. 39 |
பின்னர், ஒரு முழு நிலவு நாள் வந்தது. தெளிவான வானத்தில் முழு நிலவைப்பார்த்து, காட்டில் இருந்த நரிகள் ஊளையிடத்தொடங்கின. இதைக்கேட்ட நம் ராஜா நீல நரியும், தனது புதிய பதவியை மறந்து விட்டு தானும் ஊளையிடத்தொடங்கியது. 40 |
காட்டின் புதிய ராஜா நரிகளைப்போல ஊளையிடுவதைக்கண்ட மற்ற விலங்குகள் திகைத்துப்போயின. அவை உண்மையை விரைவாகப்புரிந்து கொண்டன. 41 |
அவர்கள் முன் நின்ற ராஜாவை நீல நிறம் பூசப்பட்ட ஓர் நரியென அடையாளம் கண்டு கொண்டன. 42 |
அவைகள் கோபமாக நரியை நோக்கி விரைந்தன. எல்லா விலங்குகளும் தன்னை நோக்கி வருவதைக்கண்ட நரி, தனக்கு என்ன நேரப்போகின்றது என்பதை உணர்ந்தது. 43 |
அந்த நரி தன் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஆழமான காட்டிற்குள் ஓடிப்போனது. அந்த நரியை அதற்குப்பின் யாரும் அந்த காட்டில் மீண்டும் பார்த்ததில்லை. 44 ★ |
 |