 |
|
ரஷிய மொழியில் முதல் பதிவு: ஜனவரி 1886 ஆங்கிலத்தில் மொழிமாற்றம்: 1912 மொழிமாற்றியது: கொன்ஸ்டன்ஸ் கிளாரா கார்னெட் தமிழாக்கம்: 2022, ஷான் உதே |
அது ஒரு அந்தி மாலை. ஈரமான பனியின் பெரியத்துளிகள், செதில்கள் போல், இப்போதுதான் ஏற்றப்பட்ட தெரு விளக்குகளின் மேல் சோம்பேறித்தனமாக சுழன்றுக்கொண்டிருந்தன. வீழ்கின்ற பனித்துளிகள் கூரைகளின் மேல் மெல்லிய மென்மையான அடுக்கிலும், குதிரைகளின் முதுகுகளிலும், தோள்களிலும், தொப்பிகளிலும் படர்ந்துகொண்டிருந்தன. 1 |
பனியில் இழுத்தபடி ஓடும் அந்த சக்கரமில்லாத குதிரை வண்டியின் ஓட்டுநரான இயோனா ப்பட்டாபொவ், வெள்ளையாக பேய் போல் தோற்றமளித்தான். ஓர் உயிருள்ள உடல், தன் உடலை வளைக்கக்கூடிய அளவுக்கு இருமடங்குக்கு மேல் தன்னை வளைத்திருந்தபடி, அந்த பெட்டிக்குள் அவன் அசையாமல் அமர்ந்திருந்தான். ஒரு பெரிய பனிக்கட்டி அவன் மேல் விழுந்தால், அவன் தன்னை அசைத்து அதை தட்டி வீழ்த்த வேண்டும் என்பது அவசியமென்றுகூட நினைக்க மாட்டான் போல் தோன்றியது. 2 |
அவனது குதிரையும் வெள்ளையாகவும் அசையாமலும் நின்றது. இந்த குதிரையின் அசைவற்ற நிலை, அதன் வரிகளின் கோணம், குச்சி போன்ற நேரான கால்கள் எல்லாம் அதனை அரை சதத்திற்கு கடையில் விற்கும் இஞ்சிப்பாண் குதிரை போன்ற தோற்றத்தை உண்டுபண்ணியது. 3 |
அந்தக்குதிரை ஒருவேளை சிந்தனையில் தன்னை தொலைத்திருக்கலாம். எவராவது, கலப்பையிலிருந்து கழட்டப்பட்டும், தனது பழக்கமான சாம்பல் நிலப்பரப்புகளிலிருந்து அகற்றப்பட்டும், பின், மந்தமான பயம் காட்டக்கூடிய தெருவிளக்குகளால் நிறைந்ததும், இடைவிடாது சலசலப்புகள் கொண்டதும், அவசரமாக ஓடித்திரியும் மக்கள் நிறைந்ததுமான இந்த இடத்தில் கொணர்ந்து நிறுத்தப்பட்டால், சிந்திக்கத்தான் செய்வார்கள். 4 |
இயோனாவும் அவனது பெண்குதிரையும் அசைந்து நீண்ட நேரங்களாகிவிட்டிருந்தன. இவர்கள் இரவு உணவுக்கு முன்பே அவர்களின் வசிப்பிடத்திலிருந்து இந்த சந்திக்கு வந்திருந்தும், ஒரு வாடிக்கையாளரும் இன்னும் கிடைக்கவில்லை. 5 |
இப்பொழுது, மாலையின் சாயல் இந்த நகரில் விழ ஆரம்பித்துவிட்டது. தெரு விளக்குகளில் மந்தமாக இருந்த ஒளி, இப்பொழுது தெளிவான நிறத்திற்கு மாறத்தொடங்கிவிட்டது. தெருக்களின் பரபரப்பும் மிக சத்தமானதாக மாறிவிட்டிருந்தன. 6 |
“வண்டி வைபோக்ஸ்கயா’க்கு! வண்டி!” இயோனாவுக்கு கேட்டது. 7 |
இயோனா வண்டியை தயார்படுத்தும் போது, பனியால் மூடப்பட்ட தனது கண்ணிமைகளினூடே, அதிகாரி ஒருவர் இராணுவ மேலங்கியில் தலையையும் காதுகளையும் மறைக்கக்கூடிய ஒரு தொப்பி அணிந்தபடி நிற்பதை கண்டான். 8 |
“வைபோக்ஸ்கயா’க்கு!” மீண்டும் சொன்னார் அந்த அதிகாரி; “நித்திரை கொள்கிறாயா? வைபோக்ஸ்கயா’க்கு!” 9 |
தனக்கு ’வைபோக்ஸ்கயா’ என்று சொன்னவை கேட்டது என்பதை தான் ஒப்புக்கொண்டதின் அடையாளமாக, இயோனா கடிவாளத்தை பலமாக இழுத்த போது, குதிரை அசைந்ததினால், அதன் முதுகிலிருந்தும் பின்புறமிருந்தும் பனிக்கட்டிகள் தூக்கி வீசப்பட்டன. 10 |
அந்த அதிகாரி வண்டியில் ஏறிக்கொண்டார். இயோனா குதிரைக்கு சமிக்ஞை கொடுத்துவிட்டு, தனது கழுத்தை அன்னம் போல உயர்த்திவிட்டு, தனது அமர்க்கையில் எழுந்தமர்ந்தபடி தேவைக்கு அதிகமாகவே தனது சாட்டையை வீசினான். 11 |
அவனது பெண்குதிரையும் கழுத்தை அன்னம் போலே உயர்த்திவிட்டு, தன் குச்சி போன்ற கால்களை மடித்தபடி, தயக்கத்துடன் புறப்பட்டது. 12 |
“எங்கே நீ வண்டியை செலுத்துகிறாய், பிசாசே?” இயோனாவுக்கு அவனுக்கு முன்னே குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் இருண்ட உருவங்களின் கூச்சல்கள் கேட்டன. 13 |
“எங்கே பிசாசே நீ போகிறாய்? வலப்பக்கம் வைத்திரு! உனக்கு வண்டி ஓட்டத்தெரியாது. வலப்பக்கம் வைத்திரு!” கோபமாக சொன்னார் அந்த அதிகாரி. 14 |
இன்னுமொரு வண்டிக்காரன் அவனை திட்டித்தீர்த்தான். பாதையை கடந்து போய்க்கொண்டிருந்த பாதசாரி ஒருவன் தன் தோள்பட்டையுடன் குதிரையின் மூக்கு உரசியதை பொறுக்காமல், இயோனாவை பார்த்து முறைத்தபடி தனது தோளில் இருந்த பனியை தட்டிவிட்டான். 15 |
தனது பெட்டிக்குள், முற்களின் மேல் தான் அமர்ந்திருப்பது போல் படபடத்தப்படியும், முழங்கைகளை குளிர்தாங்காமல் அசைத்தபடியும், பேய்பிடித்தவன் போல கண்களை உருட்டியபடியும், தான் எங்கே இருக்கிறேன், ஏன் இருக்கிறேன் என்று தெரியாதது போல இருந்தான். 16 |
“என்ன அயோக்கியர்கள் அவர்கள் எல்லோரும்! அவர்கள் உனக்கு எதிராக அல்லது உனது குதிரையின் கால்களுக்குள் வீழ்ந்து விடாமல் தங்களால் முடிந்தவரை வேகமாக ஓடுகிறார்கள். அவர்கள் வேண்டுமென்றே அதை செய்கிறார்கள்.” நகைச்சுவையாக சொன்னார் அந்த அதிகாரி. 17 |
இயோனா தனது வாடிக்கையாளரை பார்த்து ஏதோ சொல்வதற்காக உதடுகளை அசைக்கப்பார்த்தான். ஆனால் வெளிப்படையாக காற்று தான் வந்ததே அன்றி வேறெதுவும் வரவில்லை. 18 |
“என்ன?” அதிகாரி விசாரித்தார். 19 |
இயோனா ஒரு வறட்டுப்புன்னகையைத்தந்து, தனது தொண்டையை அழுத்தி, சலசலப்புடன் குரலை வெளியே கொண்டு வந்தான்: “என் மகன்... என் மகன் இந்த வாரம் இறந்து விட்டான் சேர்.” 20 |
“ம்ம்! அவன் எப்படி செத்துப்போனான்?” 21 |
இயோனா தனது முழு உடலையும் தனது பயணியின் பக்கம் திருப்பி, “யாரால் சொல்ல முடியும்! அது காய்ச்சலால் இருந்திருக்க வேண்டும். மூன்று நாட்கள் மருத்துவமனையில் கிடந்தான். பின் இறந்துவிட்டான். இறைவனின் விருப்பம்.” என்று கூறினான். 22 |
“முன்னுக்கு திரும்பு பிசாசே!” இருட்டிலிருந்து அந்த குரல் வந்தது. “உனக்கு பித்துப்பிடித்துவிட்டதா, வயதான நாயே? எங்கே போகிறாய் என்று பார்!” 23 |
“ஓடு! ஓடு! இந்த வேகத்தில் போனால் நாளை வரை நாங்கள் அங்கு போய்சேரமாட்டோம். சீக்கிரம்!” என்றார் அந்த அதிகாரி. 24 |
இயோனா, கழுத்தை மீண்டும் உயர்த்தி, தனது இருக்கையில் இருந்து எழுந்து, கனமான பலத்துடன் அவனது சவுக்கை சுழற்றினான். பலமுறை அவன் அதிகாரியை திருப்பிப்பார்த்தான். ஆனால், அதிகாரியோ வெளிப்படையாக, எதுவுமே கேட்க விரும்பாதவரைபோல் கண்களை மூடியபடி இருந்தார். 25 |
இயோனா, வைபோக்ஸ்கயா வந்து சேர்ந்ததும் தனது பயணியை இறக்கிவிட்டு, ஒரு உணவகத்துக்கு அருகில் வண்டியை நிறுத்தி விட்டு, மீண்டும் பெட்டியினுள் பதுங்கிக்கொண்டான். 26 |
மீண்டும் ஈரமான பனி அவனையும் அவனது குதிரையையும் வெள்ளையாக வர்ணம் தீட்ட ஆரம்பித்தது. 27 |
ஒரு மணி நேரம் கழிந்தது. பின்னர் இன்னுமொரு மணி நேரமும் கடந்து போனது. 28 |
மூன்று இளைஞர்கள், இரண்டு உயரமாகவும் மெலிதாகவும் இருந்தார்கள். மூன்றாவது குட்டையாகவும் கூன் முதுகை கொண்டவனாகவும் இருந்தான். மூவரும் ஒருவரை ஒருவர் திட்டியபடியும், நடைபாதையில் சத்தமாக தங்கள் நீர் புகா சப்பாத்துக்களால் குத்தியபடியும் நடந்து வந்தார்கள். 29 |
“வண்டிக்காரா, போலீஸ் பாலத்துக்கு! நாங்கள் மூவரும். இருபது கோபெக்குகள்!” முதுகு வளைந்தவன் உடைந்த குரலில் கேட்டான். 30 |
இயோனா கடிவாளத்தை இழுத்து, தனது குதிரையை அழுத்தினான். இருபது கோபெக்குகள் நியாயமான கட்டணம் அல்ல தான். ஆயினும், அவனிடம் அதைபற்றி சிந்திப்பதற்கும் எண்ணங்கள் இருக்கவில்லை. அது ஒரு ரூபிளா அல்லது அது ஐந்து கோபெக்குகளா என்பது முக்கியமல்ல. இப்போது அவனுக்கு தேவை பயணிகள் மாத்திரமே. 31 |
மூன்று இளைஞர்களும், முறையற்ற வார்த்தைகள் பேசியபடியும், ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும், வண்டி வரை சென்று, ஒரே நேரத்தில் மூவரும் உள்ளே அமர முயற்சி செய்தார்கள். 32 |
அவர்கள் உள்ளே அமர்வதற்கு முன்பு அவர்களுக்குள் ஒரு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியிருந்தது. ’யார் அமர்ந்து பயணிக்கவேண்டும்? யார் நின்று பயணிக்கவேண்டும்?’ நீண்ட நேர வாக்குவாதங்கள், கோபங்கள், துஷ்பிரயோகங்களின் பின், அவர்கள் முதுகு வளைந்தவன் குட்டையாக இருப்பதால் நின்றுபயணிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்தார்கள். 33 |
முதுகு வளைந்தவன் தனது கரடுமுரடான குரலில், “சரி, ஓடு!” என்று சொல்லியபடி, தன்னை வண்டிக்குள் தயார்படுத்தியபடி இயோனாவின் பிடரியில் பெரிதாக ஒரு மூச்சு விட்டான். “வேகமாய் போ! என்னடா ஒரு தொப்பி உன்னிடம் உள்ளது, என் நண்பரே! இதைவிட ஒரு மோசமான தொப்பியை முழு பீட்டர்ஸ்பர்க்கிலும் நீ காண முடியாது.” 34 |
“ஹேஹே ஹேஹே! இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை!” இயோனா சிரித்தபடி சொன்னான். 35 |
“சரி, இதில் பெருமைப்பட ஒன்றுமில்லை என்றால், ஓடு! வழியெல்லாம் இப்படித்தான் ஓட்டப்போகிறாயா? ஹே! நான் பிடரியில் ஒன்றைத்தரட்டுமா?” 36 |
“என் தலை வலிக்கிறது, நேற்று டொக்மசோவ்’வில், வாஸ்காவும் நானும், எங்களுக்கு இடையே நான்கு பிராந்தி பாட்டில்கள் குடித்தோம்.” என்றான் உயரமானவர்களில் ஒருவன். 37 |
“நீ ஏன் இதை எல்லாம் இப்போ பேசுகிறாய் என்று எனக்கு தெரியவில்லை. நீ ஒரு மடையன் மாதிரி பொய் சொல்லுகிறாய்.” என்று மற்றைய உயரமானவன் கோபமாக கூறினான். 38 |
“உண்மை இல்லையென்றால் என்னை அடித்து கொன்றுவிடு, இது தான் உண்மை!” 39 |
“தலையிலிருக்கும் பேனுக்கு இருமல் வருவது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை.” 40 |
“ஹேஹே! மகிழ்ச்சியான மனிதர்கள்!” இயோனா சிரித்தான். 41 |
“ப்பூ! பிசாசு உன்னை அழைத்துச்செல்லும்! வேகமாக போவாயா, வயதான பிசாசே. இல்லை மாட்டாயா? இப்படி தான் நீ ஓட்டுவாயா? சாட்டையில் அவளுக்கு ஒன்று கொடு. அவளுக்கு நன்றாக கொடு.” முதுகு வளைந்தவன் கோபமாக கத்தினான். 42 |
இயோனா தனது முதுகுக்குப்பின்னால் கூச்சலிடும் முதுகு வளைந்தவனின் நடுங்கும் குரலை உணர்ந்தான். முன்னே பாதையில் போய்வரும் மக்களை பார்த்தபடியும் அவன் தன்மீது பாய்ச்சப்படும் வக்கிரமங்களை கேட்டபடியும் இருந்தான். 43 |
தனது இதயத்திலிருந்த தனிமை மெதுவாக அதிகரிப்பதை உணரத்தொடங்கினான். முதுகு வளைந்தவன் கடைசியாக தனக்கு இருமல் வரும் வரை மிகவும் விரிவான முறையில் புகார் செய்து கொண்டே இருந்தான். 44 |
உடன் வந்த மற்றைய உயரமானவர்களில் ஒருவன் யாரோ ’நடயெஸ்டா பெட்ரோகோஸ்கனா’ என்பவரைப்பற்றி பேசத்தொடங்கினான். 45 |
இயோனா அவர்களைச்சுற்றிப்பார்த்தான். அவன் அவர்களின் பேச்சில் ஒரு சிறிய இடைநிறுத்தத்திற்காக காத்திருந்தான். அந்த இடைவேளை வந்த போது மீண்டும் திரும்பி, “இந்த வாரம்...என் மகன்...என் மகன் இறந்து விட்டான்!” என்று முணுமுணுத்தான். 46 |
“நாங்கள் எல்லோரும்தான் இறந்து போவோம்,” ஒரு பெருமூச்சுடன் முதுகு வளைந்தவன் சொன்னான், இருமியபின் உதடுகளை துடைத்தபடி. 47 |
“போ! ஓடு! ஓடு! என் நண்பர்களே, இப்படி ஊர்ந்து செல்வதை என்னால் தாங்க முடியாது! எப்போது தான் இவன் எங்களை அங்கே கொண்டுபோய்ச்சேர்க்கப்போகிறானோ?” 48 |
“சரி, நீ அவனுக்கு கொஞ்சம் ஊக்கம் கொடு. பிடரியில் ஒன்று!” 49 |
“நீ கேட்டாயா, கிழட்டு கொள்ளை நோயே? நான் உன்னை புத்திசாலியாக்குகிறேன். வயதான மிருகமே, கேட்கிறாயா? அல்லது, நாங்கள் சொல்வதை நீ பொருட்படுத்தவே இல்லையா?” 50 |
இயோனா தனது பிடரியில் அவன் அறைந்ததை உணர்ந்ததை விட, அவன் சொன்னது கேட்டது. 51 |
“ஹே! ஹே! மகிழ்ச்சியான மனிதர்களே, கடவுள் உங்களுக்கு ஆரோக்கியத்தைத்தரட்டும்!” இயோனா சிரித்தான். 52 |
“வண்டிக்காரா, நீ திருமணம் முடித்துவிட்டாயா?” உயர்ந்த மனிதனில் ஒருவன் கேட்டான். 53 |
“நான்? ஹி ஹி, மகிழ்ச்சியான மனிதர்களே! இப்போதெல்லாம் எனக்கு இருக்கும் ஒரே மனைவி என் காலுக்குக்கீழே உள்ள நிலம் தான். ஹோஹோ கல்லறை, அதாவது! என் மகன் இறந்துவிட்டான், இன்னும் நான் வாழ்கிறேன். என்ன, ஒரு விசித்திரமான விஷயம் நடக்கப்போகிறது? மரணம் எங்கள் இருவரையும் பார்த்து குழம்பிவிட்டது. எனக்காக வருவதற்குப்பதிலாக, என் பையனுக்காக அது சென்று விட்டது.” 54 |
இயோனா தனது மகன் எப்படி இறந்தான் என்பதை அவர்களிடம் கூறுவதற்காக முகத்தை திருப்புகிறான், ஆனால் அந்த நேரத்தில் முதுகு வளைந்தவன் ஒரு சின்னதான பெருமூச்சு விட்டுவிட்டுச்சொன்னான், “கடவுளுக்கு நன்றி. இறுதியாக வந்துசேர்ந்துவிட்டோம்.” 55 |
தனக்கான இருபது கோபெக்குகளை எடுத்துக்கொண்டதும், இயோனா ஒரு இருண்ட நுழைவுக்குள் மறைந்து செல்லும் வரை அந்த மூவரையும் பார்த்தபடி நின்றான். 56 |
மீண்டும் இயோனாவுக்கு துணையாக தனிமையும் மௌனமும் வந்துசேர்ந்தது. அவன் அடக்கி வைத்திருந்த பெரும் துன்பம் மீண்டும் வந்து அவனது நெஞ்சை அதன் வலிமையால் பலமாக அடித்தது. 57 |
அமைதியற்ற கவலை தோய்ந்த கண்களுடன், தெருவின் இருபுறமும் ஆர்வத்துடன் ஓடிக்கொண்டிருந்த கூட்டத்தின் மீது இயோனாவின் கண்கள் ஓடின. இந்த ஆயிரம் பேரில் அவன் பேச்சைக்கேட்க ஒருவர் கூட இல்லையா? ஆனால் மக்கள் கூட்டம் அவனைப்பற்றியோ அல்லது அவனது துயரத்தைப்பற்றியோ கவலைப்படாமல் கிடந்தது. 58 |
இயோனாவின் துன்பங்கள் பெரிது. அவை எல்லையின்றி விரிந்தது. அவனது நெஞ்சம் பிளந்து, அவனது துன்பங்கள் அனைத்தும் வெளியேறினால், அது பூமி முழுவதையும் மூழ்கடித்துவிடும். ஆனால் அது இன்னும் வெளிப்படவில்லை. 59 |
இயோனாவின் துன்பங்கள் யாவும் இன்னும் யாருமே பார்க்க முடியாதபடி ஒரு சிறிய ஓட்டுக்குள் அடங்கிப்போய்க்கிடந்தது, பகல் நேரத்தில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கூட யாருமே அதை காணமுயாத அளவுக்கு. 60 |
ஒரு காகிதப்பையுடன் வீட்டு வாயில் காவலர் ஒருவனை இயோனா கண்டான். அவனுடன் பேச முடிவு செய்தான். 61 |
“நேரம் என்ன இருக்கும் நண்பரே?” இயோனா கேட்டான். 62 |
“பத்து மணி! ஏன் இங்கே நிறுத்தினாய்? ஓட்டு!” 63 |
இயோனா சில அடி தூரம் வண்டியை ஓட்டிச்சென்று, குனிந்தபடி தன்னை இரட்டிப்பாக வளைத்து, அவனது துயரத்திற்குள் தானே அமுங்கிப்போனான். யாரும் அவனுடன் பேச விரும்பவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. 64 |
ஆனால், அவன் சில நிமிடங்கள் கழியும் முன் நிமிர்ந்து, நெஞ்சில் உணர்ந்த ஒரு கூர்மையான வலியை உதறித்தள்ளுவது போல் தலையை உதறிவிட்டு, கடிவாளத்தை இழுத்தான். யாரிடமும் முறையிடுவது நல்லதல்ல என்று அவனுக்கு நினைப்பு வருகிறது. இருந்தும் இனிமேலும் அவனால் தாங்க முடியாது. 65 |
’மீண்டும் தளத்துக்கு! தளத்துக்கு!’ அவன் நினைத்தான். 66 |
அவனது குதிரையும், அவனுடைய எண்ணத்தை சரியாகப்புரிந்துகொண்டு, நடக்க ஆரம்பித்தது. ஒன்றரை மணி நேரம் அளவில் இயோனா தன் தளத்தில் ஒரு பெரிய அழுக்கான அடுப்பொன்றுக்கு அருகில் அமர்ந்திருந்தான். அடுப்புக்கு அருகில், தரையில், வாங்குகளில், பலர் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். 67 |
அந்த இடம் முழுவதும் நிறைந்திருந்த காற்று அடைப்பாகவும், இடம் துர்நாற்றம் நிறைந்ததாகவும் இருந்தது. இயோனா தூங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களை ஒரு நோட்டம் விட்டான். தன்னைத்தானே சொரிந்துகொண்டு, இவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வந்ததற்காக வருந்தினான். 68 |
’ஓட்ஸ் கஞ்சிக்கு கூட பணம் கொடுக்கும் அளவுக்கு நான் இன்று சம்பாதிக்கவில்லை. அதனால்தான் நான் இப்படி பரிதாபகரமாக இருக்கிறேன். தன் வேலையைச்செய்யத்தெரிந்த மனிதன், தானும் நன்றாகச்சாப்பிட்டு, தன் குதிரைக்கும் நன்றாக உணவளித்து வாழுவான். அப்படிப்பட்ட மனிதன் என்றென்றும் நிம்மதியாக இருப்பான்.’ என்று அவன் சலித்துக்கொண்டான். 69 |
ஒரு மூலையில் படுத்திருந்த இன்னுமொரு இளம் வண்டிக்காரன் எழுந்து, அரைத்தூக்கத்தில் தொண்டையைக்கனைத்தபடி, மூலையில் இருக்கும் தண்ணீர் வாளியை நோக்கி கைகளை நீட்டினான். 70 |
“தண்ணீர் வேண்டுமா?” இயோனா அவனிடம் கேட்டான். 71 |
“அப்படித்தான் தெரிகிறது.” 72 |
“நல்லது. ஆனால் என் மகன் இறந்துவிட்டான் நண்பரே. கேட்கிறீர்களா? இந்த வாரம் மருத்துவமனையில். இது ஒரு வினோதமான சம்பவம்.” 73 |
இயோனா தனது வார்த்தைகள் என்ன விளைவை மற்றைய இளம் வண்டிக்காரனிடம் ஏற்படுத்தின என்பதை உற்று கவனித்தான். அவனால் எதையும் காணமுடியவில்லை. அந்த இளைஞனோ ஏற்கனவே தலையை மூடிக்கொண்டு தூங்கிவிட்டான். 74 |
இயோனா பெருமூச்சு விட்டபடி தன்னைத்தானே சொறிந்து கொண்டான். அந்த இளைஞனுக்கு தண்ணீர் தாகம் வந்தது போல, இயோனாவுக்கு பேச்சு தாகம் இப்போ வந்திருந்தது. 75 |
மிக விரைவில் அவன் மகன் இறந்து ஒரு வாரம் ஆகிவிடும். இருந்தும், அவனால் இதுவரை யாரிடமும் மகனுடைய மரணம் பற்றி பேசமுடியவில்லை. அவன் அதைப்பற்றி முழுமையாகவும், ஆழமாகவும் யாருடனாவது பேச வேண்டும் என்று நினைத்தான். 76 |
அவனுக்கு எல்லாவற்றையும் சொல்ல வேண்டும். அவனது மகன் எப்படி நோய்வாய்ப்பட்டான், எப்படி அவதிப்பட்டான், இறப்பதற்கு முன் என்ன சொன்னான், எப்படி இறந்தான், இறுதிச்சடங்கு எவ்வாறு நடந்தது, இறந்தவனின் ஆடைகளை எடுக்க எப்படி மருத்துவமனைக்குச்சென்றது எல்லாவற்றையும் அவன் விவரிக்க வேண்டும். 77 |
அவனது மகள் அனிசா, தூரே அவளது சொந்த கிராமத்தில் இன்னும் உயிருடன் இருக்கிறாள். அவளைப்பற்றியும் சொல்லவேண்டும். ஆமாம். அவனுக்கு பேச நிறையவே இருந்தது. 78 |
அவனைக்கேட்பவர் பெருமூச்சு விட வேண்டும், கூச்சலிட வேண்டும், மூச்சுத்திணற வேண்டும், அழ வேண்டும். பெண்களுடன் இதைப்பற்றி பேசினால் இன்னும் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்துக்கொண்டான். அவர்கள் எப்போதும் கவனமாகக்கேட்டு, சரியான தருணங்களில் அழுவார்கள். 79 |
’நாம் வெளியே சென்று குதிரையை பார்ப்போம். தூங்குவதற்கு எப்போதும் வாய்ப்பு கிடைக்கும். திருப்தி அடையும் அளவுக்கு தூங்கமுடியும். கவலைப்பட வேண்டியதில்லை.’ இயோனா நினைத்தான். 80 |
அவன் தனது மேலங்கியை அணிந்துகொண்டு, தனது குதிரை நிற்கும் தொழுவத்திற்குச்சென்றான். அவன் ஓட்ஸ், வைக்கோல், வானிலை பற்றியெல்லாம் இப்போ சிந்தித்தான். தனிமையில் இருக்கும் போது மகனைப்பற்றி சிந்திக்க துணியவில்லை. 81 |
அவன் யாரிடமாவது மகனைப்பற்றி பேச முடியும். ஆனால் அவனைப்பற்றி யோசிப்பது அல்லது அவனது முகத்தை கற்பனை செய்வது கூட சகிப்புத்தன்மை இல்லாமல் தாங்க முடியாத வேதனையாக இருந்தது. 82 |
குதிரையின் பளபளப்பான கண்களைப்பார்த்து இயோனா குதிரையிடம் கேட்டான், “சப்பி சாப்பிடுகிறாயா. சரி, சாப்பிடு, சாப்பிடு. ஓட்ஸுக்கு போதுமான அளவு சம்பாதிக்காததால், எங்கள் இருவருக்கும் எப்போதும் வைக்கோல் இருக்கும்.” 83 |
“ஆமாம். நானும் வண்டி ஓட்ட முடியாத அளவுக்கு வயதாகிவிட்டேன். என் மகன் தான் இப்போ ஓட்ட வேண்டும், நான் அல்ல. அவன் ஒரு உண்மையான வண்டிக்காரன். அவன் வாழ்ந்திருக்க வேண்டும்.” 84 |
இயோனா கொஞ்ச நேரம் மௌனமாக இருந்துவிட்டு பேச ஆரம்பித்தான். 85 |
“அது அப்படித்தான் வயதான பெண்ணே. குஸ்மா லொனிச் போய்விட்டான். நான் போய் வருகிறேன் என்று சொன்னான். அவன் எந்த காரணமுமில்லாமல் இறந்து போனான். எப்படி உனக்கு புரியவைப்பது?” 86 |
“உன்னிடம் ஒரு குட்டி இருக்கிறது, அதற்கு நீ தான் தாய் என்று வைத்துக்கொள்வோம். ஒருநாள், அந்த குட்டி இறந்து போகிறது. உனக்கு அது கவலையாய் இருக்கும். இருக்காதா?” 87 |
அந்த சின்ன பெண்குதிரை வைக்கோலை சப்பி உண்டபடியும் எல்லாவற்றையும் கேட்டபடியும், தனது எஜமானின் கைகளில் பெருமூச்சொன்று விட்டது. 88 |
இயோனா உற்சாகத்தில் அந்த குதிரையிடம் முழு கதையையும் சொல்ல ஆரம்பித்தான். 89 |
எல்லாவற்றையும் சொன்னான். அவனது மகன் எப்படி நோய்வாய்ப்பட்டான், எப்படி அவதிப்பட்டான், இறப்பதற்கு முன் என்ன சொன்னான், எப்படி இறந்தான், இறுதிச்சடங்கு எவ்வாறு நடந்தது, இறந்தவனின் ஆடைகளை எடுக்க எப்படி மருத்துவமனைக்குச்சென்றது எல்லாவற்றையும் அவன் சொன்னான். 90 |
குதிரை எல்லாவற்றையும் கேட்டது. 91 ★ |
 |