 |
|
|
அது பெரியதோர் நகரம். ஒவ்வொரு காலையிலும் நகரம் முழுமையாக விழித்தெழுவதற்கு முன்பே நான் என் தளத்திற்கு வந்துவிடுவேன். 1 |
சூரியன் இன்னும் உதிக்காமல் இருக்கும், தெருக்கள் இன்னும் பனியால் நனைந்திருக்கும், காற்று மிருதுவாகவும் கூர்மையாகவும் இருக்கும், வரவிருக்கும் நாளின் வாக்குறுதிகளுடன். என் இயந்திரத்தின் ஓசை மட்டுமே அமைதியைக்கலைக்கும் ஒரே சத்தம். 2 |
என்னுடைய வேலை எளிமையானது, அல்லது அப்படித்தான் தோன்றுகின்றது. நான் தெருக்களைச்சுத்தம் செய்கிறேன், நடைபாதைகளை ஒழுங்குப்படுத்துகிறேன், நகரத்திற்கு வந்து சேரப்போகும் அதன் பரபரப்பான கூட்டத்திற்கு ஏற்ப சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்கிறேன். 3 |
ஆனால் நான் பார்ப்பவர்களை விட எனக்குப்புலப்படுவது அதிகமாகவே இருக்கிறது. 4 |
நான் தெருக்களிலும் நடைபாதைகளிலும் இயந்திரத்தைத்தள்ளிக்கொண்டு செல்லும் சாதாரன வெற்று குப்பை தொழிலாளியல்ல. நான் நடக்கும் ஒவ்வொரு தெருவிற்கும் ஒரு தாளம் உண்டு. ஒவ்வொரு மூலை முடுக்கிற்குள்ளும் ஒரு கதை உண்டு. ஒவ்வொரு குப்பைத்துண்டினுள்ளும் ஒரு செய்தி உண்டு. இவைகள் எல்லாவற்றையும் உணரும் தன்மையும் எனக்கு உண்டு. 5 |
சாலை ஓரங்களில் துடைக்கும் இயந்திரத்தை நான் வழிநடத்திச்செல்லும்போது, நகரத்தின் கிசுகிசுப்புகளை கேட்கிறேன். காற்றில் சிக்கிய காகிதச்சுருக்கங்ககளின் சிரிப்பொலிகள் பல ரகம். சாலை ஓரத்தில் துள்ளிக்குதிக்கும் பழைய தகர டப்பாக்களின் கீச்சல்கள் பல ரகம். நேற்று வீழ்ந்த காய்ந்த இலைகளின் மேல் நடக்கும் போது அவைகளின் புறுபுறுப்புக்கள் பல ரகம். ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. 6 |
என் துடைப்பத்தின் சத்தம் நகரத்திற்கு ஒரு தாலாட்டுப்பாடலாக உணர்கிறது, அந்த தாலாட்டு சப்தத்தை மீண்டும் சுவாசிக்க வைக்கும் ஒரு வழியாகும். 7 |
எனக்கு தரப்பட்ட பாதை என்னை நகரத்தின் மையப்பகுதியில் உள்ள ஒரு சந்தை வழியாக எடுத்துச்செல்கிறது. அங்கு விற்பனையாளர்கள் தங்கள் கடைகளை அமைக்க தொடங்கியுள்ளனர், புதிதாக செய்யப்பட்ட ரொட்டி மற்றும் அருகில் இருக்கும் காப்பி கடையிலிருந்து வரும் காப்பியின் வாசனை காற்றை நிரப்புகிறது. 8 |
இந்த காப்பி கடை ஊழியர்களினால் தினமும் எனக்கு கொடுக்கப்படும் இரண்டு இலவச குரோசண்ட்களும், ஒரு இலவச கப்புசினோவும்தான் என்னுடைய காலை உணவு. இல்லையெனில், அவற்றை வாங்குவது எனக்கு ஆடம்பரமான செலவு. மேலும், அவர்களிடமிருந்து வரும் பல புன்னகைகளும் சிறிய அரட்டைகளும் என் தினத்தை உற்சாகப்படுத்துகின்றன. 9 |
இங்கு வந்ததும் முன்னோக்கிப்போவதை வேண்டுமென்றே நான் தாமதப்படுத்துகிறேன். விற்பனையாளர்கள் தங்கள் நாளைத்தொடங்கும்போது அவர்களுடன் அரட்டை அடிப்பது எனக்கு அவசியம், இல்லையெனில், பேசுவதற்கு நிரந்தரமாக யாரும் இல்லை. இங்கு என்னை சுற்றியுள்ளவர்கள் மட்டுமே எனது குடும்பம். 10 |
அங்கொரு அழகான பூங்கா. நேர்த்தியாக அமைக்கப்பட்ட பெஞ்சுகளும் மரங்களும் புல்தரைகளும் நடைபாதைகளும் கொண்ட பூங்கா. நான் ஒவ்வொரு காலையும் இங்கு வரும்போதெல்லாம், எந்தவித கட்டுக்குள்ளும் அடங்காத முந்தைய இரவில் அங்கு வந்தவர்களின் எச்சங்கள் தரையில் சிதறிக்கிடப்பதை காண்கின்றேன்: பலரக கண்ணாடி போத்தல்கள் சில உடைந்தும் சில உடையாமலும். பலரக நெகிழிப்போத்தல்கள். சில தீர்ந்தும் சில தீராமலும். பலரக உணவுப்பொதிகள் சில புசித்தும் சில புசியாமலும். அவற்றை கிழித்துப்போட்ட நரிகளினதும் நாய்களினதும் வருகையின் அடையாளங்களுடன். நாப்கின்கள். பாவித்த ஆணுறைகள். நெகிழிப்பொதிகள். சாக்கடையின் உச்சம் இந்த பூங்கா. 11 |
நான் எல்லாவற்றையும் ஒழுங்குப்படுத்துகிறேன், ஒவ்வொரு சிறிய வேலையும் முடிந்ததில் திருப்தி அடைகிறேன். 12 |
இங்கு சில சந்துப்பாதைகளும் உள்ளன. இரண்டு கட்டிடங்களுக்கு இடையே உள்ள ஒரு குறுகிய, மறக்கப்பட்ட பகுதி. நண்பகலில் கூட நிழல்கள் நீடித்த பகுதி. 13 |
இங்குள்ள நடைபாதைகள் சீரற்றதாகவும், விரிசல்களுடனும், எதிர்பார்த்தபடி குப்பைகளால் நிறைந்ததாகவும் உள்ளன. நகரசபை கவனிக்க வேண்டிய முதல் இடம் இதுதான், ஆனால் நகரசபை கவனிக்கும் கடைசி இடமே இதுதான். 14 |
அந்த சந்து எனக்கு நன்றாகத்தெரியும்: சுவரில் உள்ள ஒவ்வொரு பள்ளமும், ஒவ்வொரு சுவர்சித்திரங்களும், அங்கு வந்து சேரும் ஒவ்வொரு குப்பைத்துண்டும். 15 |
வாயிலிருந்து கொட்டியவைகளும் வயிற்றிலிருந்து கொட்டியவைகளும் ஆங்காங்கே சிதறிக்கிடக்கின்றன. தேவை என்று சேர்த்து வைத்த பல பொருட்கள் தேவை இல்லை என்றானபின் சேர்ந்துவிடும் இடமும் சில வேளைகளில் இதுதான். காவல் துரையின் கண்ணுக்கு படாமல் காமம் ஏலம் விடப்படும் இடம். பணத்தேவையும் பாலியல் தேவையும் நடு இரவுகளில் சங்கமிக்கும் இடம். வேலை முடிந்ததும் அவைகள் எச்சம் விட்ட நெகிழி ஆணுறைகள் பல அதற்கு சாட்சி. இந்த துர்நாற்றத்தில் எப்படி தான் இவைகள் கொஞ்சிக்குலாவுகின்றனவோ. கருமையான உலகின் வெள்ளை முகம் இது போன்ற சந்துக்கள். 16 |
இருந்தாலும், அந்தச்சந்துக்குள் ஏதோ ஒன்று என்னை ஈர்க்கிறது: வெளியே உள்ள ஒழுங்கான உலகத்திற்கு எதிரான, அமைதியை கிளறிவிடும் ஒர் உணர்வு. 17 |
எவ்வளவு நாற்றம் அடிக்கும் இடமாக இருந்தாலும் யாருக்கோ எவருக்கோ இது ஒர் அமைதிப்பூங்கா. இந்த கரடு முரடான சுவர்களில் அவரவர் எண்ணங்களையும் கவலைகளையும் எதிர்பார்ப்புகளையும் வர்ணம் பல கொண்டு சுவர்ச்சித்திரங்களாக கொட்டிவிட்டு பெருமூச்செறிந்து போகின்ற மனிதர்கள் பலர். நாளும் ஒரு வர்ணம். யாரோ கீறியதை அளித்து விட்டு வேறு யாரோ அதன் மேல் வேறு பதிவுகள் பதித்துவிட்டு போகின்றார்கள். ஆனால் அந்த சுவர்கள், யாரும் உரிமை கொண்டாட முடியாத கேன்வாஸ்கள். 18 |
சில நாட்களுக்கு முன்பு, அந்த சந்து சுவர்களில் ஒன்றில் முழு அளவிலான, கையால் வரையப்பட்ட சுவர்ச்சித்தரமொன்றை பார்த்தேன். அது பலூன்களை வைத்திருக்கும் ஒரு இளம் பெண்ணின் எளிய ஓவியம். அவள் பலூன்களை ஏந்தியிருந்தாலும், அவள் முகத்தில் மகிழ்ச்சியின் எந்த அறிகுறியும் இல்லை, லேசாக இருந்தாலும் கூட. 19 |
நான் கூட்டுவதை நிறுத்திவிட்டு அந்த படத்தை வெறித்துப்பார்த்தேன். அதில் பெரிதாக ஒன்றும் இல்லை, ஆனால் அதை ஒரு செய்தியாக உணர்ந்தேன். யாரோ ஒரு பெண் தனது கடந்தகால வாழ்க்கையின் ஒரு பகுதியை மற்றவர்கள் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் விட்டுச்சென்றது போல. 20 |
இப்போது, இருட்டில், ஒரு தலைசிறந்த படைப்பை வரைந்துவிட்டு மறைந்து போன அந்த ஓவியரைப்பற்றி சிந்திக்க முயற்சிக்கிறேன். 21 |
எனக்கு புரிகிறது. முந்தைய இரவின் எச்சங்களை மாத்திரம் நான் துடைத்து எறியவில்லை. நகரம் தெரியாத முகங்களின் பல அனுபவங்களையும், மறக்கப்பட்ட தருணங்களையும் சுவாசிக்க இடத்தை உருவாக்குகிறேன். 22 |
ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு மூலையிலும், ஒவ்வொரு சந்தும் ஒரு கேன்வாஸ், தெரு துப்பரவாளனான நான், நிழலில் மறைந்திருக்கும் கதைகளின் கலைஞனும் பாதுகாவலனும் ஆகிய இரண்டிலும் இருக்கிறேன். 23 |
சூரியன் மறையத்தொடங்கி, நகரம் ஓய்வெடுக்க தொடங்கியதும், நானும் என் தளத்திற்கு திரும்பிச்செல்கிறேன். 24 |
ஆமாம். நான் ஒரு வெறும் தெரு துப்பரவாளர் அல்ல, இந்த இயந்திரத்தையும் துடைப்பத்தையும் தள்ளியபடி ஒவ்வொரு நாளையும் ஒரு புதியதொரு நாளாக உருவாக்கும் ஒரு வாய்ப்பை பெற்றவனாக நினைக்கிறன். 25 ★ |
 |